'கருத்து சொன்னதற்காக வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை': சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி கருத்து
'கருத்து சொன்னதற்காக வழக்கு போடுவது பாசிச அணுகுமுறை': சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி கருத்து
ADDED : ஜன 18, 2025 07:06 AM

சென்னை : நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து, தவறான தகவல்களை பரப்பியதாக அளித்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கடந்த டிசம்பர், 24ல் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
சமீப காலமாக, கருத்து தெரிவித்ததற்காக, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதுடன், அவர்கள் கைது செய்யப்படுவதையும் காண முடிகிறது. ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க கருத்துக்கள் அடங்கியது.
அவற்றில் உள்ளடக்கம் உள்ளவை மட்டுமே நிலைத்து நிற்கும். ஒரு கருத்து ஆதாரமற்றதாக இருந்தால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. ஒரு கருத்தை சொன்னதற்காக, ஒருவர் மீது வழக்கு தொடுப்பது, பாசிச அணுகுமுறையாகும்.
வழக்கு தொடுப்பது வேறு; கைது செய்வது வேறு என்பதை, உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெரிவித்துள்ளது. காவல் துறையினர் தேவையற்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.
இது, போலீசாரின் காதுகளில் விழுந்ததாக தெரியவில்லை. வன்முறை துாண்டப்படும் போது மட்டுமே, காவல்துறை தலையிடுவது நியாயப்படுத்தப்படும். இந்த வழக்கில் மனுதாரர் சவுக்கு சங்கர் மீது, இரு முறை குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்கிய போது, அடுத்தடுத்த வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.
இத்தகைய அணுகுமுறை, சட்டத்தின் மீதான மரியாதையை குறைக்கும் விதமாக உள்ளது. மனுதாரர், முக்கியத்துவம் இல்லாத காரணத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
காவல் துறையின் தவறான நடத்தை, எல்லா இடங்களிலும் தெளிவாக தெரிகிறது என்பதால், அவர்களின் செயலை கண்டிக்கிறேன். மனுதார் மீதான வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என, நீதிமன்றம் கருதுவதால் அவருக்கு நிபந்தனை விதிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.