அண்ணாமலையை வரவேற்க பாடல் ஹேஷ்டேக்: பா.ஜ.,வினர் ஏற்பாடு
அண்ணாமலையை வரவேற்க பாடல் ஹேஷ்டேக்: பா.ஜ.,வினர் ஏற்பாடு
ADDED : நவ 30, 2024 05:35 AM

மதுரை: மூன்று மாத கால அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை டிச.,1 ல் நாடு திரும்புகிறார். வந்த பின் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட உள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக அண்ணாமலைக்கு பதிலாக எச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு பா.ஜ.,வின் நடவடிக்கைகளை கையாண்டது. இந்நிலையில் சென்னை வரும் அண்ணாமலையை வரவேற்று, பா.ஜ.,வினர் பாடல் ஒன்றை உருவாக்கி வைரலாக்கியுள்ளனர்.
'வச்சக்குறி தப்பாதுடா... சிங்கம் இது சிக்காதுடா...
சுத்துப்போட்டு நிக்காதடா... சூறை விட்டா தாங்காதுடா...
சிவன்டா.... சிவன்டா... சிவன்டா...
எதுக்க எவன்டா... எவன்டா... எவன்டா...' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.
பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவும் மாநில தலைவர் எம்.எஸ்.பாலாஜி, பார்வையாளர் அர்ஜூனமூர்த்தி ஆகியோர் தலைமையில் துணைப் பொதுச் செயலாளர் விஷ்ணுபிரசாத், செயலாளர் செந்தில்குமார் உட்பட மாவட்ட நிர்வாகிகளுடன், ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினர்.
சென்னை திரும்பும் அண்ணாமலையை வரவேற்று, இன்று (நவ.,30) மாலை முதல் 'டி.என்.வெல்கம் அண்ணாமலை' என்ற ஹேஷ்டேக்கை சமூகவலைதளங்களில் பிரபலப்படுத்தி, அதிக தொண்டர்களை ஈர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.