தென் மாவட்ட வேட்பாளர் தேர்வு கனிமொழியிடம் ஒப்படைப்பு
தென் மாவட்ட வேட்பாளர் தேர்வு கனிமொழியிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 22, 2025 04:54 AM

தென் மண்டல சட்டசபை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியை, தி.மு.க., மண்டல பொறுப்பாளரும், துணை பொதுச்செயலருமான கனிமொழியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், துணை முதல்வர் உதயநிதி ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் ஆட்சியை தக்கவைக்க வேட்பாளர்கள் தேர்வில், தி.மு.க., தலைமை கூடுதல் கவனம் செலுத்த உள்ளது. தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், தென் மண்டல பொறுப்பாளராக உள்ள கனிமொழியிடம் துாத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களில் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோரின் தொகுதிகளில் உட்கட்சி பூசல்கள் அதிகமாக உள்ளன. அதனால் தகுதியானவர்க ளையும், மக்கள் செல்வாக்கு உள்ளவர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என, கனிமொழிக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இது தெரிந்ததும், இம்மாவட்டங்களில் உள்ள துணை முதல்வர் உதயநிதி ஆதரவு நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதற்கு காரணம், இளைஞரணி நிர்வாகிகளாக இருக்கும் சிலர், தங்களுக்கு 'சீட்' கிடைக்காமல் போய்விடும் என, அஞ்சுகின்றனர்.
- நமது நிருபர் -