தகவல் கோரியவர்களுக்கு மிரட்டல்; அறப்போர் இயக்கம் புகார்
தகவல் கோரியவர்களுக்கு மிரட்டல்; அறப்போர் இயக்கம் புகார்
ADDED : அக் 22, 2025 04:50 AM

சென்னை: 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனு செய்தவர் விபரங்களை, பொது தகவல் அலுவலர்கள் வெளியிடுவதால், மனுதாரர்கள் மிரட்டப்படுகின்றனர். மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் உள்ளிட்டோருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அனுப்பி உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்துார் பேரூராட்சியை சேர்ந்த ஜானகிராமன், அஜித்குமார் ஆகியோர், பேரூராட்சிக்கான நிதி, திட்டங்கள், அவற்றின் செயலாக்கம் குறித்து, பல்வேறு தகவல்கள் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்கள் அனுப்பினர்.
அதைத் தொடர்ந்து, பேரூராட்சியில் பணி புரியும் ராஜேஷ் என்பவர், ஜானகிராமனின் தந்தையையும், அஜித் குமாரின் தந்தை மற்றும் உறவின ரையும் தொடர்பு கொண்டு, அவர்களை அலுவலகத்துக்கு நேரில் அழைத்துள்ளார்.
அங்கு சென்ற போது, பேரூராட்சி தலைவர் சரவணன், அலுவலர் வெற்றிவேல், ராஜேஷ் ஆகியோர், இது போன்ற மனுக்கள் ஏன் போடப்பட்டது என கேட்டதுடன், இனி இது போன்று தகவல் கேட்டு மனு செய்ய மாட்டேன் என, எழுதி தரும்படி கேட்டுள்ளனர்.
இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில், இருக்கந்துரை பஞ்சாயத்தில் சுரங்கங்கள், கிராமசபை தீர்மானத்தின் செயலாக்கம் குறித்து, திருச்செல்வன் என்பவர் ஆர்.டி.ஐ., வாயிலாக தகவல் கேட்டு உள்ளார்.
அதைத் தொடர்ந்து, குவாரி உரிமையாளரான பீட்டர் ராபின் என்பவர், திருச்செல்வனின் மகனை அழைத்து மிரட்டி உள்ளார்.
ஆர்.டி.ஐ., வாயிலாக மனு அனுப்புவோர் விபரங்களை, பொது தகவல் அலுவலர்கள் யாரிடமும் பகிரக்கூடாது என உத்தரவு உள்ளது.
இதை மீறி மனுதாரர்களின் விபரங்களை வெளியிட்ட பொது தகவல் அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.ஐ., மனுதாரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.