தீபாவளி பரிசு மழையால் தி.மு.க.,வில் உற்சாகம்; விஜயை மட்டுமே நம்புவதால் அ.தி.மு.க.,வினர் 'அப்செட்'
தீபாவளி பரிசு மழையால் தி.மு.க.,வில் உற்சாகம்; விஜயை மட்டுமே நம்புவதால் அ.தி.மு.க.,வினர் 'அப்செட்'
ADDED : அக் 22, 2025 04:38 AM

தீபாவளி பணம் கிடைத்ததால், தி.மு.க.,வினர் உற்சாகத்தில் மிதக்கும் நிலையில், அ.தி.மு.க.,வில், த.வெ.க., கூட்டணியே கதி என கிடப்பதால், அக்கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் வருத்தத்தில் உள்ளனர்.
தி.மு.க.,வில் கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், வார்டு, பகுதி, மாவட்ட நிர்வாகிகள் வரை, அனைவருக்கும் தீபாவளி பரிசாக, தலா பத்தாயிரம் முதல், 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.
பகுதி பிரதிநிதிகள், துணைச் செயலர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், வார்டு செயலர், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டு உள்ளது.
பகுதி, ஒன்றிய, நகர செயலர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் பணம் வழங்கப்பட்டு உள்ளது.
பரிசு பொருட்களாக பட்டு வேட்டி, பட்டு சேலை, பட்டாசு, இனிப்பு மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்களும் வழங்கி, கட்சியினரை ஆளும் கட்சித் தலைமை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கண்டுகொள்ளவில்லை அதேநேரம், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தலைமை, இந்த முறையும் தீபாவளிக்கு எந்த பரிசும் தராமல் ஒதுங்கிக் கொண்டது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே, தீபாவளி பரிசுகள் வழங்கவில்லை என்கின்றனர், அக்கட்சி நிர்வாகிகள்.
தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ள நிலையில், த.வெ.க., வுடன் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையை மட்டுமே, அ.தி.மு.க., தலைமை அளித்து வருகிறது.
'அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., கூட்டணி அமையும் பட்சத்தில், அது வெற்றி கூட்டணியாக இருக்கும்' என, கட்சி தலைமை கருதுவதால், தீபாவளி பரிசு பற்றி கண்டுகொள்ளவில்லை.
எதிர்க்கட்சி தலைமை, த.வெ.க., கூட்டணியே கதி என காத்திருப்பதால், கட்சியினரை மகிழ்விக்க எதையும் செய்ய முன்வரவில்லை.
த.வெ.க., வரவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் சூழலில், அது கை கூடாமல் போனால் , கட்சியினர் உற்சாகம் இழக்க நேரிடும். அதனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி, விஜய்க்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
எந்த தேர்தலாக இருந்தாலும், அனைத்து கட்சிகளுக்கும் முன்பாக, அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பணிகள் துவக்கப்படும். கூட்டணிக்கு எந்த கட்சி வருகிறது என எதிர்பார்க் காமல், கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
தன்னம்பிக்கை தற்போது நிலைமை மாறி விட்டது. கட்சி தலைமைக்கே தன்னம்பிக்கை போய் விட்டது. 'மெகா கூட்டணி அமைப்போம், பெரிய கட்சி நம் கூட்டணிக்கு வர உள்ளது' என, பொதுச்செயலரே கூறுகிறார்.
பெரிய கட்சி என்றால், நாம் பெரிய கட்சி இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
பொதுச்செயலரை பின்பற்றி, இரண்டாம் கட்ட தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள், த.வெ.க., வந்தால் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், அக்கட்சிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இதை வைத்து, கட்சியில் கவனிப்பும் இல்லை. கூட்டணி அமைந்தால் வெற்றி என, தலைவர்கள் பேசுவதை அடுத்து, நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்துஉள்ளனர்.
த.வெ.க., போன்ற கட்சிகள், கூட்டணிக்கு வராவிட்டால், தோற்று விடுவோம் என்ற நிலையை ஏற்படுத்துவது, கட்சியின் தோல்விக்கே வழிவகுக்கும்.
இதை தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். கூட்டணி இல்லாவிட்டாலும், கட்சி வெற்றி பெற, தொண்டர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -