தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் சந்திரபாபு நாயுடு மகன் பதில்
தி.மு.க., - அ.தி.மு.க., மோதல் சந்திரபாபு நாயுடு மகன் பதில்
ADDED : அக் 22, 2025 04:26 AM

சென்னை: உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றாக, கூகுள் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம், இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, ஆந்திராவில் பெரிய அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
'ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், கூகுள் நிறுவனம் 'ஏஐ' மையம் அமைக்க உள்ளது' என, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி வித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார், ''அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யக்கூடிய மிகப்பெரிய முதலீடு இதுதான்.
''கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். மதுரை மண்ணின் மைந்தர். உலகளாவிய அளவில், தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார். அவரை அணுகி முறைப்படி அழைப்பு கொடுத்திருந்தால், தமிழகத்திற்கு இந்த மையம் வந்திருக்கும்.
''தமிழகத்திற்கு வர வேண்டிய, 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை, தி.மு.க., அரசு கோட்டை விட்டது. அந்த மையம் செயல்படத் துவங்கினால், வருடத்துக்கு 10,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். அந்த வாய்ப்பை, தமிழகம் பறிகொடுத்திருக்கிறது,'' என்றார்.
இதற்கு தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து கூறுகையில், ''மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன.
''இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதில், பா.ஜ.,-வின் அழுத்தம் உள்ளது. அதனால் தான் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு எதிராக பா.ஜ., உள்ளது,'' என்றார்.
கூகுள் ஏஐ மையம் குறித்து, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நார லோகேஷ் கூறுகையில், ''சுந்தர் பிச்சை தமிழக மண்ணை பூர்வீகமாகக் கொண்ட வரா க இருக்கலாம். ஆனால், அவர் இந்தியர்.
''அந்த வகையில் தான், தங்கள் நிறுவன 'ஏஐ' மையத்தை நிறுவ இந்தியாவின் அங்கமான ஆந்திர மாநிலத்தை தேர்வு செய்துள்ளார். இதில் யாரும் அரசியலை நுழைக்கக் கூடாது,'' என்றார்.