வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கண்துடைப்பு ஆய்வுக்கு 'குட்பை'
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கண்துடைப்பு ஆய்வுக்கு 'குட்பை'
ADDED : அக் 22, 2025 03:23 AM

சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், ஆய்வு விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர். இதில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, இதற்கென மொபைல் போன் செயலியை, கூட்டுறவு துறை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன; இவை பயிர் கடன், நகை கடன் போன்ற பிரிவுகளில் கடன் வழங்குவதுடன், உரங்களை விற்கின்றன. ரேஷன் கடை நடத்துவதுடன், வேளாண் உழவு கருவிகளை வாடகைக்கு விடுகின்றன.
சங்கங்களில் பணிபுரியும் சிலர், சங்க நிதியில் முறைகேடு செய்வது, போலி நகைகளுக்கு கடன் வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
சார் - பதிவாளர், துணை பதிவாளர், இணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள், சங்கங்களில் ஆய்வுக்கு செல்லும்போது , முறைகேடுகளை கண்டுபிடித்தால், அதன் குறிப்பு விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்கின்றனர்.
இதில், ஆய்வுக்கு செல்லாமல் ஆய்வு செய்ததுபோல் பதிவு செய்வது, வேண்டுமென்றே தவறாக பதிவு செய்வது, கண்துடைப்பிற்கு ஆய்வு செய்வது போன்ற புகார்கள் எழுகின்றன.
இதை தவிர்க்கும் வகையில், ஆய்வுக்கென தனி மொபைல் போன் செயலியை, கூட்டுறவு துறை உருவாக்கியுள்ளது. இதன் சோதனை முடிவடைந்த நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதன் வாயிலாக, ஒரு சங்கத்தில் தவறு நடந்து இருப்பதை அதிகாரி கண்டறிந்து, செயலியில் பதிவு செய்தால், அதை சென்னையில் உள்ள உயரதிகாரிகள் தெரிந்து கொள்ள முடியும். தவறு செய்தவர் மீது விரைவாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க முடியும்.