தென்மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள்: தேவை என்னென்ன... இதோ பட்டியல்
தென்மாவட்ட ரயில்வே வளர்ச்சி பணிகள்: தேவை என்னென்ன... இதோ பட்டியல்
UPDATED : ஏப் 17, 2025 06:40 AM
ADDED : ஏப் 17, 2025 05:10 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் ஏப். 24 காலை 11:00 மணிக்கு மதுரையில் ரயில்வே துறை வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் தென் மாவட்ட மக்களுக்கு தேவையான கூடுதல் ரயில்கள் கிடைக்க எம்.பி.க்கள் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் தற்போது சென்னை, கோவை, பெங்களூரு, உட்பட பல்வேறு நகரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் வந்து செல்ல போதிய ரயில் வசதிகள் இல்லை. எனவே, கூடுதல் ரயில் வசதிகள் செய்து தர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகள்:
அந்தியோதயா ரயில்கள்
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு முழுமையும் முன்பதிவில்லா அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. அதே போல், செங்கோட்டை, போடிநாயக்கனூர், திருச்சி- காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக ராமேஸ்வரம், திண்டுக்கல், -பழநி-, பொள்ளாச்சி வழியாக கோவை, வேலூர், சேலம்-, ஈரோடு ,-திருப்பூர் வழியாக கோவை ஆகிய நகரங்களுக்கும் சென்னையில் இருந்து பகல் மற்றும் இரவு நேர அந்தியோதயா ரயில்களும் இயக்க வேண்டும்.
வந்தே பாரத் ரயில்கள் வேண்டும்
தற்போது மதுரை வழியாக சென்னை, பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. இதில் பெங்களூரு ரயில் திருச்சி வழியாக சுற்றி செல்கிறது. எனவே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக பெங்களூருக்கு மேலும் ஒரு வந்தே பாரத் இயக்க வேண்டும்.
ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை, பெங்களூருக்கு ரயில்கள் இயக்க வேண்டும்.
நிரந்தரமாக்க வேண்டிய சிறப்பு ரயில்கள்
அவ்வப்போது நீட்டிப்பு செய்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களான தாம்பரம் -- நாகர்கோவில், தாம்பரம் -- கொச்சு வேலி, திருநெல்வேலி --மேட்டுப்பாளையம், எர்ணாகுளம்- - வேளாங்கண்ணி ரயில்களை நிரந்தரமாக்கி தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கும் செங்கோட்டை - -சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ், போடி - சென்னை, கன்னியாகுமரி -- ராமேஸ்வரம், 2 நாட்கள் இயங்கும் எர்ணாகுளம்-- வேளாங்கண்ணி, வாரத்தில் ஒரு நாள் இயங்கும் புதுச்சேரி- - கன்னியாகுமரி, வாரத்தில் 6 நாட்கள் சென்னைக்கு இயங்கும் தேஜஸ், வந்தே பாரத் போன்ற ரயில்களை தினசரி சேவையாக இயக்க வேண்டும்.
தேவை பயணிகள் ரயில்கள்
மதுரையில் இருந்து தினமும் துாத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விருதுநகர்- செங்கோட்டை வழியாக கொல்லம், ஓசூர், வேலூர், புதுச்சேரி நகரங்களுக்கு சென்று திரும்பும் வகையில் பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும்.
தினமும் 4 முறை பயணிகள் ரயில் சேவை
தற்போது செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு தினமும் 4 முறை பயணிகள் ரயில் இயங்கி வருகிறது.
இதேபோல் மதுரையில் இருந்து தினமும் கோவை, போடி, ராமேஸ்வரம், செங்கோட்டை நகரங்களுக்கும் தினமும் 4 முறை பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில்கள்
மதுரையில் இருந்து சிவகங்கை, கல்லல், தேவகோட்டை, காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை, கீரனூர், திருச்சி, தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக மயிலாடுதுறைக்கும், காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக கடலூருக்கும் ரயில்கள் இயக்க வேண்டும்.
செங்கோட்டை-- மயிலாடுதுறை, குருவாயூர்-- மதுரை, ராமேஸ்வரம்-- மதுரை, கோவை - -நாகர்கோவில், பாலக்காடு-- திருச்செந்தூர் உள்ளிட்ட பயணிகள் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
தேவை நான்கு முன்பதிவில்லா பெட்டிகள்
முன்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்ஜின் அருகே 2, கடைசியில் இரண்டு என 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருந்தன.
தற்போது 3 பெட்டிகள் மட்டுமே உள்ளன. மீண்டும் 4 பெட்டிகள் இணைக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஆலோசனை கூட்டத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்த வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.