தப்பியோடியவர்களின் வழக்குகளை விசாரிக்க மாநில தலைநகரங்களில் சிறப்பு பிரிவு: அமித் ஷா உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்
தப்பியோடியவர்களின் வழக்குகளை விசாரிக்க மாநில தலைநகரங்களில் சிறப்பு பிரிவு: அமித் ஷா உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்
ADDED : அக் 17, 2025 12:49 AM

''தப்பியோடிய குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் சிறப்பு பிரிவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். அத்தகைய பிரிவு இல்லாதது, குற்றவாளிகளை நாடு கடத்தும் செயல்பாட்டில் சிக்கல்களை உருவாக்குகிறது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தலைநகர் டில்லியில், சி.பி.ஐ., சார்பில், 'தப்பியோடியவர்களை நாடு கடத்துதல்; சவால்களும், உத்திகளும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் மாநாடு நேற்று துவங்கியது.
இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், வெளியுறவு அதிகாரிகள் மற்றும் பல மாநிலங்களின் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சிக்கல்
இந்த மாநாட்டை துவக்கி வைத்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:
தப்பியோடிய குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் சிறப்பு பிரிவை மாநில அரசுகள் அமைக்க வேண்டும். இது, சர்வதேச அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.
இத்தகைய சிறப்பு பிரிவு இல்லாதது, குற்றவாளிகளை நாடு கடத்தும் செயல்பாட்டில் சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, யாரும் எந்தவொரு சாக்குபோக்கும் சொல்ல முடியாதபடி மாநில அரசுகள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும்.
நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற பொருளாதார குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சைபர் குற்றவாளிகள் உட்பட தப்பியோடியவர்களிடம் இரக்கம் காட்டக்கூடாது.
ஊழல், குற்றம், பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும் அது தொடர வேண்டும்.
சிறப்பு நிபுணர் குழு
தப்பியோடிய நபர்களின் விபரங்களை சேகரித்து, தரவுத்தளத்தை உருவாக்கி, அதை அனைத்து மாநில போலீசாருடனும் பகிர வேண்டும். இதில் உளவுத்துறை, சி.பி.ஐ., ஆகியவை அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
இந்த தரவுத்தளத்தில், குற்றவாளிகள் மீதுள்ள வழக்குகள், அவர்கள் எங்கு தப்பி ஓடினர்? இந்தியாவில் அவர்களின் நெட்வொர்க், நாடு கடத்தும் நடவடிக்கை எங்கு தடைபட்டுள்ளது போன்ற அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும்.
போதைப் பொருள், மிரட்டி பணம் பறித்தல், நிதி மற்றும் சைபர் குற்றங்களை கண்காணிக்க சிறப்பு நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும். இதற்கு உளவுத்துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள் வழிகாட்ட வேண்டும்.
ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டவுடன், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முடியாதபடி, அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்.
பண மோசடி சட்டத்தை கடுமையாக்கியதால், 2014- - 23 வரை, தப்பியோடிய நபர்களின் 1,05,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது சிறப்பு நிருபர் -