சனாதன தர்மம் நிலைத்து நிற்பதற்கு ஸ்ரீ ஆதிசங்கரர் அவதாரமே காரணம்: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ஆசியுரை
சனாதன தர்மம் நிலைத்து நிற்பதற்கு ஸ்ரீ ஆதிசங்கரர் அவதாரமே காரணம்: சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ஆசியுரை
ADDED : அக் 28, 2024 01:02 AM

காஞ்சிபுரம்: “எத்தனையோ அழிவு முயற்சிகள் நடந்தாலும், சனாதன வைதீக தர்மம் இன்றும் நிலைத்து நிற்பதற்கு, அத்வைத சித்தாந்தத்தை அருளிய, ஸ்ரீ ஆதிசங்கரரின் அவதாரமே காரணம்,” என, சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் தெரிவித்தார்.
'விஜய யாத்திரை - சென்னை 2024'ன் துவக்கமாக, பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் வந்தடைந்த, சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் சுவாமிக்கு, அங்குள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ், சமஸ்கிருதத்தில் வரவேற்பு மடல்கள் வாசிக்கப்பட்டன.
பக்தர்களின் வரவேற்பை ஏற்று, அவர் வழங்கிய ஆசியுரை:
இந்த உலகில், 12 நுாற்றாண்டுகளுக்கு முன் அவதரித்த ஸ்ரீ ஆதிசங்கரர் சனாதன வைதீக தர்மத்தை அருளினார்.
இந்த வாழ்க்கையை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை, உபநிடதங்களில் சொல்லப்பட்ட அத்வைத சித்தாந்தத்தில் இருந்து அனைவருக்கும் உபதேசித்தார்.
உலகிற்கு அவர் அளித்த இந்த உபகாரத்தை, உலகில் உள்ள எந்த ஆத்திகரும், எப்போதும் மறக்கவே முடியாது. இன்று நாம் எல்லாரும், சனாதன வைதீக தர்மத்தை பின்பற்றுகிறோம் என்றால், அதற்கு ஸ்ரீ ஆதிசங்கரர் தான் காரணம். இதில், எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.
தினமும் ஆராதனைகள்
ஸ்ரீஆதிசங்கரர், நாடு முழுதும் யாத்திரை மேற்கொண்டு, எல்லாருக்கும் நல்வழியை காட்டினார். பாரத நாட்டில் உள்ள, பல்வேறு புனித தலங்களுக்கு சென்று வழிபட்டார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஸ்ரீசக்கரத்தை நிறுவினார். இன்றும் அதற்கு, தினமும் ஆராதனைகள் நடக்கின்றன.
அதன் வாயிலாக அனைவருக்கும், காமாட்சி அம்பாளின் அருள் கிடைக்கிறது. ஸ்ரீசக்கரத்தை ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவியதால், இக்கோவிலின் பெருமை மேலும் அதிகமானது.
அதுபோல திருமலையில், தனாகிருஷ்ண எந்திரத்தை நிறுவினார். கொல்லுார் ஸ்ரீமூகாம்பிகை கோவிலில், அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்தார். அங்கு, ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய சிலையையே நாம் பார்க்கிறோம்.
தவறான வழியில் சென்றவர்களை, சரியான வழிக்கு கொண்டு வந்தார். உபதேசம் செய்வதை, அகங்காரத்தால் யார் கேட்கவில்லையோ, அவர்களிடம் மட்டுமே வாதம் செய்தார்.
தன் அறிவாற்றலை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக வாதம் செய்யவில்லை. எவ்வளவு சொல்லியும் கேட்காதவர்களுடன் வாதம் செய்து வென்று, அவர்களை சரியான வழிக்கு திருப்பினார்.
கிரந்தங்கள், ஸ்தோத்திரங்களை இயற்றினார். கிரந்தங்களில் அத்வைத சித்தாந்தத்தை விளக்கமாக சொல்லி உள்ளார். அடுத்து சிருங்கேரி, துவாரகை, புரி, பத்ரிநாத் என, நாட்டின் நான்கு திசைகளிலும், ஸ்ரீசாரதா பீடங்களை நிறுவினார்.
அதற்கு அவரது சீடர்களை ஆச்சார்யார்களாக, அதிபதிகளாக நியமித்து, அவர்களின் பரம்பரையில் வரக்கூடியவர்களின் கடமை என்ன என்பதையும் வரையறுத்தார்.
ஸ்ரீசாரதா பீடங்களின் ஆச்சார்யார்கள், ஸ்ரீசாரதா சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்வது உள்ளிட்ட தினசரி கடமைகளை செய்ய வேண்டும். சீடர்களுக்கு தர்ம தத்துவத்தையும், பிரம்ம தத்துவத்தையும் உபதேசம் செய்ய வேண்டும்.
சீடர்களுக்கு சரியான தர்ம வழியை காட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, நாடு முழுதும் விஜய யாத்திரைகள் மேற்கொண்டு, சனாதன வைதீக தர்மத்தையும், அத்வைத சித்தாந்தத்தையும், கிரந்தங்களையும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.
பிரார்த்தனை
அதன்படி, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் சங்கராச்சாரியார்கள் அனைவரும் நாடு முழுதும் விஜய யாத்திரை மேற்கொண்டனர். அப்போது, காஞ்சிபுரத்துக்கும் வருகை தந்து உள்ளனர். ஸ்ரீ காமாட்சி அம்பாளை தரிசனம் செய்து, உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஸ்ரீ ஆதிசங்கரர் காலத்திலிருந்தே, சிருங்கேரிக்கும், காஞ்சிபுரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. என் குருநாதர் சிருங்கேரி சங்கராச்சாரியார், 12 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். அதன்பின், சங்கராச்சாரியார்கள் சென்னை வருகை நடக்கவில்லை.
அதனால் இந்த முறை, சென்னையில் விஜய யாத்திரை செல்ல முடிவு செய்தேன். சென்னை மாநகர பக்தர்களும் விரும்பினர். சென்னை வரும் முன், தொன்மையான காஞ்சிபுரம் வர திட்டமிட்டோம்.
காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சாரதா பீடத்திற்கு வர வேண்டும்; காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்பாளை, ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரரை, ஸ்ரீ வரதராஜ பெருமாளை தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்திருக்கிறேன்.
ஆசியுரை
அதனால், பெங்களூரில் இருந்து நேரடியாக காஞ்சிபுரம் வந்திருக்கிறேன். ஒரே நாளில் இவ்வளவு தொலைவு பயணம் செய்வது மிகவும் குறைவு.
காலடியில் அவதரித்த ஸ்ரீ ஆதிசங்கரர், 32 ஆண்டு களுக்குள் நான்கு பீடங்களையும் நிறுவி, அனைத்து பணிகளையும் முடித்து, கேதார்நாத்தில் அவதாரத்தை பூர்த்தி செய்தார். சனாதன வைதீக தர்மத்தை அழிக்க, 12 நுாற்றாண்டுகளாக எத்தனையோ பேர், எவ்வளவோ முயற்சிகள் செய்தனர்.
ஆனால், இன்றும் இந்த தர்மம் நிலைத்து நிற்பதற்கு, ஸ்ரீ ஆதிசங்கரரே காரணம். அந்த அளவுக்கு உறுதியுடன் தர்மத்தை அவர் நிலைநிறுத்தி உள்ளார். அவர் காட்டிய வழியில் செல்ல, இந்த வாழ்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீ ஆதிசங்கரரின் திவ்ய சரித்திரத்தை, அவர் அவதாரத்தில் செய்த பணிகளை, மனதில் நினைப்பதே புண்ணியம் தரும் செயல். அவரது வழியில் வரும் ஆச்சார்யார்கள் காட்டும் வழியில் சென்று, இந்த வாழ்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏகாதசி நாளான இன்று, குருநாதர் ஸ்ரீ சந்திரசேகர மகாபாரதி மகா சுவாமிகளின் ஜெயந்தி. அந்நாளில் காஞ்சிபுரத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவருக்கும் நல்லது நடக்கட்டும். அனைவருக்கும் ஆசிகள்.
இவ்வாறு அவர் ஆசியுரை வழங்கினார்.