சனாதன தர்மத்திற்கு அழிவே இல்லை: சிருங்கேரி சன்னிதானம் அருளாசி
சனாதன தர்மத்திற்கு அழிவே இல்லை: சிருங்கேரி சன்னிதானம் அருளாசி
ADDED : நவ 05, 2024 04:05 AM

சென்னை: ''சனாதன தர்மத்திற்கு அழிவே இல்லை. சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் வேதங்கள். அதனால்தான் சனாதன வைதீக தர்மம் என்கிறோம். அதைத்தான் இப்போது ஹிந்து தர்மம் என்கிறோம்,'' என, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சுதர்மா இல்லத்தில் தங்கி, விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சன்னிதானம், எட்டாவது நாளாக நேற்று, காலை 9:00 முதல் 10:30 மணி வரை, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
நேற்று மாலை 6:00 மணிக்கு, சென்னை, ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர் பள்ளிக்கு வருகை தந்த சிருங்கேரி சன்னிதானத்திற்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை, வேத மந்திரங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் உள்ள வேத பாடசாலையை சன்னிதானம் பார்வையிட்டார். பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் சிலையையும் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார்.
பின், அங்கு குழுமியிருந்த பக்தர்கள் மத்தியில், சன்னிதானம் வழங்கிய அருளுரை:
உலகிலேயே பாரத நாடு மிகச்சிறந்த நாடாக உள்ளது. பாரதத்தை விட செல்வச்செழிப்பான, பரப்பளவில் பெரிய, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நாடுகள் பல உள்ளன. ஆனால், இவையெல்லாம் நம் உடல் இருக்கும்வரைதான் பயன்படும். நாம் இந்த உடலை விட வேண்டி வரும்போது பணம், செல்வத்தை உடன் கொண்டுபோக முடியாது.
ஆனால், பாரத நாட்டில் மட்டுமே இருக்கும் தர்மம் என்பது, இருக்கும்போது பயன்படும்; இறந்த பிறகும் நம்மோடு வரும்.
உடலை விட்டு மேல் உலகம் செல்லும்போது, இவர் எவ்வளவு செல்வம் சேர்த்தார் என்று கேட்க மாட்டார்கள்; எவ்வளவு தர்மம் செய்தார் என்ற கேட்டு, அதன் அடிப்படையில்தான் அவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும்.
இவ்வுலகில் வாழும்போது மன அமைதியுடன், மகிழ்ச்சியுடன் வாழ தர்மம்தான் உதவும். மனிதனுக்கு கல்வி என்பது மிகமிக அவசியம். ஆனால், அதிகம் படித்து விட்டேன் என்ற அகங்காரம் இருக்கக்கூடாது. செல்வம் இருந்தால் மட்டும் மகிழ்ச்சி வந்து விடாது.
தர்மத்தை பின்பற்றி வாழ்ந்தால்தான் மகிழ்ச்சி கிடைக்கும். அதனால்தான், நம் நாட்டில் சனாதன வைதீக தர்மம் பாரதத்தில் முக்கியமானதாக உள்ளது.
சனாதன வைதீக தர்மத்தை தான் இப்போது ஹிந்து தர்மம் என்கின்றனர். பெயரைக் கேட்டாலே அதன் சிறப்புகள் தெரிய வேண்டும். சனாதன வைதீக தர்மம் என்று சொல்வதே சரியானது. உலகிற்கு ஆதாரமாக இருப்பது தர்மம்தான். சனாதனம் என்றால் ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை என்று பொருள்.
'சனாதான தர்மத்திற்கு அழிவே இல்லை. சனாதன தர்மத்திற்கு அழிவு வந்தால், நானே அவதாரம் செய்து காப்பாற்றுவேன்' என்று, பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறியிருக்கிறார். மனிதர்களால் சனாதன தர்மத்தை காப்பாற்ற முடியாவிட்டால்தான், கடவுள் காப்பாற்ற வருவார். சனாதன தர்மத்திற்கு ஆதாரம் வேதங்கள். அதனால்தான் சனாதன வைதீக தர்மம் என்கிறோம்.
இந்த சொற்களில் அதன் முழுமையான பொருள் வந்து விடுகிறது. அதைத்தான் இப்போது ஹிந்து தர்மம் என்கிறோம். இதை புரிந்துகொண்டு, சனாதன வைதீக தர்மத்தின் வழியில் சென்று, இந்த பிறவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை, மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் ஸ்ரீஆதிசங்கரர். இன்று இவ்வளவு கோவில்கள், வேத பாடசாலைகள் இருப்பதற்கு ஸ்ரீஆதிசங்கரர்தான் காரணம். வேத கல்வி, உலகியல் கல்வி இரண்டும் இன்று அவசியம்.
நம் நாட்டு மக்களுக்கு, 'இது நம் நாடு; இந்த கலாசாரம் நம்முடையது' என்ற பெருமிதம் இருக்க வேண்டும். மற்ற தர்மங்களிலும் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நம் சனாதன தர்மம் சிறப்பு வாய்ந்தது.
வெளிநாட்டுக்கு கல்வி கற்கச் செல்பவர்கள், மீண்டும் பாரத நாட்டிற்கு திரும்பி, இங்கே சேவை செய்ய வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் சூழல் இருந்தாலும், மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பரே என்று கவலைப்படாமல், நம் கலாசாரத்தை மறக்காமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, சிருங்கேரி சன்னிதானம் அருளுரை வழங்கினார்.