'கோவில் திருப்பணிகளில் சாதனை; சோழ மன்னர்கள் வரிசையில் ஸ்டாலின்'
'கோவில் திருப்பணிகளில் சாதனை; சோழ மன்னர்கள் வரிசையில் ஸ்டாலின்'
ADDED : ஜூன் 23, 2025 03:45 AM

சென்னை : “எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்,” என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கோவில்களுக்கு வழங்கும் நிதியை முறையாக செலவிடுவதால், திருப்பணிகளுக்கு 1,365 கோடி ரூபாயை உபயதாரர்கள் வழங்கி உள்ளனர். இது, தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
கோவில் திருப்பணிகளில் சரித்திரம் படைத்ததால், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகிய மன்னர்கள் வரிசையில், முதல்வர் ஸ்டாலின் பெயரும் இடம்பெறும்.
மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்தபோது, நியாயமாக பேசினார். முதல்வர் ஸ்டாலினை மேடையில் புகழ்ந்த வரலாறும் உண்டு.
ஆத்திகர், நாத்திகர் அனைவரும் மனிதர்கள் என்ற உணர்வோடு, அவர்கள் விரும்பும் மத வழிபாட்டுக்கு தேவையானதை செய்து கொடுக்கும் ஆட்சியாக தி.மு.க., அரசு இருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, பராசக்தி படத்தில், 'கோவில்கள் கூடாது என்பதல்ல; அது கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது' என்று சொல்லி இருக்கிறார். தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆட்சியாக, அடுத்த மாதம், திருச்செந்துார் கோவிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவுக்கு, 400 கோடி ரூபாயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன.
எது ஆன்மிகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்து கொண்டிருக்கிறான்.
மதுரையில் நடந்த முருகன் மாநாடு, முழுக்க முழுக்க அரசியல் மாநாடு; நாங்கள் ஏற்று நடத்தும் பணிகள் அறம் சார்ந்த ஆன்மிக பணிகள்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்து கூறிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அவரது ஆட்சியில் ஹிந்து அறநிலையத் துறைக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கினார்
இவ்வாறு அவர் கூறினார்.