தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாடவேண்டும்: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாடவேண்டும்: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாடவேண்டும்: மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள்

16


UPDATED : ஜூலை 12, 2026 06:49 AM

ADDED : ஜூலை 12, 2026 04:35 AM

Follow on GoogleFavourite on Google

16

UPDATED : ஜூலை 12, 2026 06:49 AM ADDED : ஜூலை 12, 2026 04:35 AM


16
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடலை பாட வேண்டும். அதைத் தொடர்ந்து, தேசிய பாடல், தேசிய கீதம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும்' என, புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நம் நாட்டின் தேசிய கீதமாக, 'ஜன கண மன' பாடலும், தேசிய பாடலாக, 'வந்தே மாதரம்' பாடலும் உள்ளன. அரசு நிகழ்ச்சிகளில் இந்த இரு பாடல்களையும் கட்டாயம் பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும் என, சில மாதங்களுக்கு முன், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் இந்த உத்தரவை கடைப்பிடிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட வேண்டும் என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தால், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான முந்தைய தி.மு.க., அரசுக்கும், முன்னாள் தமிழக கவர்னர் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவியது. தேசிய கீதம் முதலில் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்போதைய கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த நிகழ்வுகளும் அரங்கேறின.

இதற்கிடையே, தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலையும் அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் முக்கிய அம்சமாக, பாடலின் அனைத்து பத்திகளையும் முழுமையாக பாட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த சூழலில், மாநில பாடலை முதலில் பாடுவதா அல்லது தேசிய கீதத்தை பாடுவதா அல்லது தேசிய பாடலை பாடுவதா என்ற குழப்பம் மாநில அரசுகளிடையே நிலவியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு நிகழ்ச்சிகளில், முதலில் தேசிய பாடலை பாட வேண்டும் அல்லது இசைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, தேசிய கீதத்தை இசைக்க வேண்டும். மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் முதலில் மாநில பாடல் பாடப்பட வேண்டும். அதன்பின், தேசிய பாடல், தேசிய கீதம் ஆகியவை பாடப்பட வேண்டும்.

தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலை இசைக்கும் போது, அவற்றின் அதிகாரப்பூர்வமான வரிகள், உச்சரிப்பு மற்றும் இசை நயம் ஆகியவை மிகவும் துல்லியமாகவும், தவறின்றியும் இருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய, தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலின் சரியான வரிகள் மற்றும் உச்சரிப்பு முறைகள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய வரிசைமுறையை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் மற்றும் மத்திய அமைச்சகங்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின், மே இறுதியில், டில்லிக்கு முதன்முறையாக சென்ற விஜய், பிரதமர் மோடியை நேரில் சந்தித்த போது, அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என, வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us