கதை, திரைக்கதை, வசனம் திரைப்படம் போல் தி.மு.க., அரசு!
கதை, திரைக்கதை, வசனம் திரைப்படம் போல் தி.மு.க., அரசு!
ADDED : பிப் 21, 2024 04:33 AM

'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை, சென்னையில் காவல் துறை கெடுபிடியால், மக்கள் சந்திப்பாக நடக்கிறது. கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் நிறைந்திருக்கும் செங்கல்பட்டு சட்டசபைத் தொகுதியின் மறைமலை நகரில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகுசிறப்பாக மக்கள் சந்திப்பாக நடந்தேறியது யாத்திரை.
அதென்ன சத்து மருந்தா?
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது மாணவி பிரசித்தி சிங், 8 வகையான சிறிய பழ மரங்கள் கொண்ட வனத்தை உருவாக்கி, 9,000 மரங்களுக்கு மேல் நட்டுள்ளார்.
இந்தச் சாதனை, இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இளம் சாதனையாளருக்கு, பிரதமர் மோடி, கடந்த 2021 ஜனவரியில் 'பால புரஸ்கார்' விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழகத்தில், பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் வண்ணத்தில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக கூறி, வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்து, அதை தடை செய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.
ஆனால், தமிழக அரசு, 'டாஸ்மாக்' நிறுவனம் மூலமாக விற்பது சத்து மருந்தா? அதை எப்போது தடை செய்வீர்கள்?
அனைத்திலும் தோல்வி
சென்னைக்கு ஒரு புதிய பஸ் நிலையம் கட்டுகிறோம் என்று கூறிவிட்டு, செங்கல்பட்டுக்கு அருகில் கிளாம்பாக்கத்தில் கட்டியிருக்கின்றனர்.
அங்கு அமைச்சர்கள் ஆய்வுக்கு வந்தபோது கூட, ஒரே ஒரு பஸ்தான் நிற்கிறது. இதுதான் தி.மு.க., அரசின் சாதனை செயல்பாடு.
மாநில வளர்ச்சி, மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊழல் தடுப்பு, கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகள் வளர்ச்சி, இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் வளர்ச்சி என, அனைத்துக் குறியீடுகளிலும், தி.மு.க., அரசு தோல்வியைத் தழுவியுள்ளது.
பொய் சொல்வதில் பிஎச்.டி.,
'மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மகளிருக்கு கொடுக்கும் 1,000 ரூபாய் உரிமைத் திட்டத்தை நிறுத்தி விடுவர்' என, கூசாமல் பொய் சொல்கிறார் அமைச்சர் மகேஷ்.
மாநில அரசின் திட்டத்தை, மத்திய அரசு எப்படி நிறுத்த முடியும் என்பதைக் கூட யோசிக்காமல், பொய் கூறுவதில், பிஎச்டி., பட்டம் பெற்றிருக்கிறார் மகேஷ்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுமக்களின் பயண நேரத்தை குறைக்க, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் வழித்தடம், பா.ஜ., ஆட்சியில் அமைக்கப்பட்டது. 598 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தை, 2022 மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார், பிரதமர் மோடி.
இது மட்டுமல்ல, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பல லட்சம் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
குடும்ப நலன்
மற்ற கட்சிகள் ஜாதி அரசியல் செய்யும்போது, நம் பிரதமர் மோடி ஆட்சி மட்டும்தான், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் ஆகியோரின் முன்னேற்றத்துக்கான, சாமானிய மனிதர்களுக்கான ஆட்சியாக நடக்கிறது.
பத்து ஆண்டுகளில், மோடி அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் மீதுகூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை.
அதே நேரம், தமிழகத்தில, ஜனநாயகம் எப்படி இருக்கக் கூடாதோ, அப்படி எல்லாம்தான் இருக்கிறது.
ஊழலிலும், குடும்ப ஆட்சியிலும் திளைத்து, ஒரு குடும்ப நலனுக்காக, அரசியல் நடந்து கொண்டிருக்கிறது.
பெயர் மாற்றம்
கடந்த 33 மாதங்களாக கதை, திரைக்கதை, வசனமாக, ஒரு திரைப்படம் போல தமிழக அரசு நடக்கிறதே தவிர, மக்களுக்கான அரசாக இல்லை.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை முழுதுமே மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி வைத்திருப்பது மட்டும்தானே தவிர, புதிய திட்டங்கள் எதையும் தி.மு.க., அறிவிக்கவில்லை.
தேர்தல் அறிக்கையில், 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுப்பதாக கூறிவிட்டு, நிதிநிலை அறிக்கையில் 60,000 பேருக்கு, அரசு வேலை கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர். உண்மையில், அரசு பணிகள் வழங்கப்பட்டது, 10,400 பேருக்கு மட்டுமே.
ஆனால், பிரதமர் மோடி, 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு, அரசு வேலை கொடுத்துஉள்ளார்.
கடன்கார மாநிலமாக இருக்கும் தமிழகத்தை, வளர்ச்சி மாநிலமாக மாற்ற வேண்டும் என்றால், இந்தியாவுக்கே முன்னோடியாக செயல்படும் பா.ஜ., ஆட்சி, தமிழகத்திலும் மலர வேண்டும்.
அதன் முதல் கட்டமாக, வரும் லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., தமிழகத்திலும் பெரு வெற்றி பெற வேண்டும். அதற்கு மக்கள் தயாராகி விட்டனர்.

