இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
இடைத்தேர்தல் வெற்றிக்கு வியூகம்; பாமக ஆதரவை கோரும் தவெக
UPDATED : செப் 11, 2026 04:52 AM
ADDED : செப் 11, 2026 04:48 AM

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க.,விற்கு ஆதரவு அளிக்கும்படி, பா.ம.க., தலைமையிடம் ரகசிய பேச்சு நடந்து வருகிறது.
காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக். 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் த.வெ.க., சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே கூட்டணியில் உள்ள, காங்., - வி.சி.க., - ம.தி.மு.க., - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட, அக்கட்சி தலைவர்கள் முன்வந்துள்ளனர்.
மதுராந்தகம், தனி தொகுதி எனினும் வன்னியர் சமுதாய ஓட்டுக்கள் கணிசமாக உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில், மதுராந்தகத்தில் பா.ம.க., ஓட்டுகள் கைகொடுத்ததால் தான், அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம் குமரவேல் எளிதில் வென்றார். எனவே, இடைத்தேர்தலில், பா.ம.க., ஆதரவை பெற த.வெ.க., தலைமை காய் நகர்த்தி வருகிறது. இரு அமைச்சர்கள், பா.ம.க., தலைமையுடன் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: த.வெ.க., கூட்டணியில் இணைய, சவுமியா உள்ளிட்ட பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அங்கு வி.சி.க., இருப்பதே, அவர்களுக்கு நெருடல். வெளிப்படையாக ஆதரவு அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாற்று ஏற்பாடாக, அ.தி.மு.க.,வை ஆதரிக்காமல், தேர்தல் புறக்கணிப்பு நிலைப்பாட்டை எடுக்குமாறு, பா.ம.க.,விடம் பேச்சு நடக்கிறது. மரகதம் குமரவேல் பதவி விலகியபோது கடுமையாக விமர்சித்த அன்புமணி, மீண்டும் போட்டியிட்டால் தோற்கடிப்போம் என சூளூரைத்தார். எனவே, பா.ம.க., இக்கட்டான நிலையில் உள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
