தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வீடியோ மோகம் எதையும் செய்யும்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

வீடியோ மோகம் எதையும் செய்யும்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

வீடியோ மோகம் எதையும் செய்யும்.. நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்

4


ADDED : செப் 11, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

4

ADDED : செப் 11, 2026 05:07 AM


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பரபரப்பான சாலையில் வீடியோ எடுப்பதற்காக காரை நிறுத்திய பெண் ஒருவரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; அதில் ஆம்புலன்ஸ் சிக்கிய வீடியோ, வேகமாக இணையத்தில் பரவியது.

காரின் கதவை திறந்த நிலையில், அந்த பெண், டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார். ஒரு கையில், போனில் வீடியோ எடுத்தபடி இருந்தார். பின்னால் வந்து நின்ற ஆம்புலன்ஸ் வழியின்றி நின்றது; அதன் சைரன் அலறியபடி இருந்தது.

லோகேந்திர சர்மா என்பவர் எடுத்த அந்த வீடியோவில், இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. 'ஆம்புலன்ஸ் சைரன், பின்னணி இசை அல்ல' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட வீடியோவில், 'உங்கள் வீடியோ காத்திருக்கலாம்; இன்னொருவரின் உடல் நிலை காத்திருக்காது' என்று கூறியுள்ளார்.

இதைக்கண்ட வலைதள பிரியர்கள், அந்தப் பெண்ணை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், குற்ற வழக்கு பதிய வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

கண்காட்சியல்ல; விழிப்புணர்வு!



நுாற்றுக்கணக்கான மஹிந்திரா தார், டொயோட்டா பார்ச்சூனர் வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நின்ற அந்த நிகழ்வு, ஏதோ கண்காட்சி நடப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பதற்காக, ரேஸ் ரக வாகன உரிமையாளர்கள் ஒன்று கூடினர்.

Image 1618121

டாமன் யூனியன் பிரதேச கலெக்டர் ஒருங்கிணைப்பில் நடந்த இந்த நிகழ்வின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. 'வேகம் கூடாது; கலாசாரம் வேண்டும்: ஆடம்பரத்தை அல்ல; பொறுப்புணர்வை காட்டுவோம்' என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் வீடியோவில், 'போக்குவரத்து விதி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலைதள பிரியர்கள் சரமாரியாக கமென்ட் செய்து வருகின்றனர்.

விடியல் தந்தது விபரீத போராட்டம்!



ஜியோ மொபைல் போன் சிக்னல் கிடைக்காமல், நீண்ட நாட்களாக அவதிப்பட்ட ராஜஸ்தான் கிராம வாலிபர் புஷ்கர், அந்த விபரீத முடிவை எடுத்தார். உள்ளூர் மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சிக்கு சென்ற அவர், 'சிக்னல் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டினார்.

Image 1618122

போலீஸ், அரசு அதிகாரிகள் பேச்சு நடத்தினர். தகவல் பரவியதும், ஊர் மக்களும் அங்கு திரண்டனர். நீண்ட நாட்களாக சிக்னல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களும், போராட்டம் நடத்துபவருக்கு ஆதரவாக பேசினர்.

'மொபைல் போன் சிக்னலே கிடைப்பதில்லை, வேலை செய்யாத போனுக்கு தண்டமாக, 'ரீசார்ஜ்' செய்ய வேண்டியுள்ளது' என்ற அவர்களது புகாரும், வாலிபரின் போராட்டமும் இணையத்தில் வேகமாக பரவியது.

மொபைல் போன் நிறுவன அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதி கூறிய பிறகே, டவரில் இருந்து இறங்கினார் புஷ்கர்.

'குடுமிப்பிடி' வீடியோ வைரல்



ச ண்டைப்படங்கள் என்றால் விரும்பி பார்க்கக்கூடிய ரசிகர்கள் எல்லா காலத்திலும் இருக்கின்றனர். ரீல்ஸ் வீடியோக்கள் பெருகி விட்ட இணையத்திலும், சண்டை வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் என்பது இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது.

Image 1618123

கொல்கட்டா மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பயணியர் இருவர், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீசார் இருவருடன் தலைமுடியை பிடித்து, கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆனது. போலீசாரிடம் தரக்குறைவாக பேசியதால் ஏற்பட்ட இந்த மோதல், பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. கொல்கட்டா போலீசார் தலையிட்டு, சண்டையை விலக்கி விட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆப்பிளுக்கே அதிர்ச்சி



ஆ ப்பிள் நிறுவனம், 'ஐபோன் 18 ப்ரோ' அறிமுகம் செய்த மறுநாளே, இந்தியாவில் அந்த போன் கிடைக்க ஆரம்பிக்க விட்டதாக வெளியான நையாண்டிச் செய்தி, இணையத்தை கலகலக்க வைத்தது.

அதாவது, பழைய 'ஐபோன் 17 ப்ரோ' போனை வாங்கி, அதன் பின்புற பேனலை மட்டும் மாற்றித்தரும் வேலையை ஒரு கடைக்காரர் செய்கிறார். அந்த பின்புற பேனல், இப்போது அறிமுகம் ஆகியுள்ள 'ஐபோன் 18 ப்ரோ' போல் இருக்கிறது.

Image 1618124

இந்த வீடியோவை கண்ட பலரும், 'செலவில்லாமல் கிடைக்கிறது புதிய ஐபோன்' என்பதாக இணையத்தில் ஜாலி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 'ஆப்பிள் நிறுவனத்துக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்' என்கின்றனர், வலைதள பிரியர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us