'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம்: 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கும் மாணவர்கள்
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம்: 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கும் மாணவர்கள்
ADDED : ஜன 09, 2026 05:27 AM

சென்னை: தமிழக அரசு வழங்கிய இலவச லேப்டாப்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றை, 'ஸ்டிக்கர்' ஒட்டி மாணவர்கள் மறைத்து வருகின்றனர்.
தமிழக அரசின் 2025 - 26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், பல்வேறு பட்டப்படிப்புகள் படிக்கும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, 20 லட்சம் இலவச 'லேப்டாப்' வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 10 லட்சம் மாணவ - மாணவியருக்கு, இலவச 'லேப்டாப்' வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்காக 'டெண்டர்' கோரப்பட்டது. அதன்படி, ஆறு லட்சம் 'ஏசர் லேப்டாப்'கள்; மூன்று லட்சம் எச்.பி., லேப்டாப்கள்; ஒரு லட்சம் டெல் லேப்டாப்கள் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன.
கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 5ம் தேதி நடந்தது. முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவியருக்கு லேப்டாப்களை வழங்கினார்.
லேப்டாப்களின் மேல்புறத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் மற்றும் அவருடைய கையெழுத்துடன், 'தமிழ் வெல்லும்' என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது.
அதேபோல், முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்துடன், 'தமிழ்நாடு வெல்லும்' என்ற வார்த்தையுடன், அவரது கையெழுத்தும்; தமிழக அரசின் லச்சினையும் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், லேப்டாப் மவுஸ் அருகே, முதல்வர் ஸ்டாலினின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இது, பெரும் பேசுபொருளானது.
தமிழக அரசின் நிதியில் வழங்கப்படும் நலத்திட்டங்களுக்கு, இப்படி தலைவர்களின் உருவப்படங்களை அச்சிடலாமா என, சமூக வலைதளங்களில் மாணவர்கள் விவாதித்து வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச லேப்டாப்களில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகைப்படத்துடன் கூடிய, 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டன. அவை தேவையில்லை என மாணவர்கள் விருபியதால், அந்த ஸ்டிக்கரை அகற்றி லேப்டாப்களை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, தி.மு.க., அரசு வழங்கிய லேப்டாப்களில் ஸ்டிக்கருக்கு பதிலாக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உருவப்படங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மறைக்க, மாணவர்கள் ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். அத்துடன் ஸ்டிக்கர் ஒட்டும் வீடியோக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

