அடுத்தடுத்து பா.ஜ., கொடுத்த அழுத்தங்கள்: அமித் ஷா - இ.பி.எஸ்., சந்திப்பின் பின்னணி?
அடுத்தடுத்து பா.ஜ., கொடுத்த அழுத்தங்கள்: அமித் ஷா - இ.பி.எஸ்., சந்திப்பின் பின்னணி?
ADDED : மார் 27, 2025 05:00 AM

பா.ஜ., மேலிடம் கொடுத்த அடுத்தடுத்த நெருக்கடியால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வியை தழுவிய பின், சில மாதங்களில், 'பா.ஜ.,வுடன், கூட்டணி இல்லை; எந்த பிரச்னை வந்தாலும் சந்திப்போம்' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார். தே.மு.தி.க., மற்றும் சிறு கட்சிகளை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, லோக்சபா தேர்தலை சந்தித்த அ.தி.மு.க., படு தோல்வி அடைந்தது.
அதிர்ந்து போனார்
இருந்தபோதும், அவ்வப்போது மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து வந்த பழனிசாமி, கடந்த 4ல், சேலம், ஆத்துாரில் நடந்த அ.தி.மு.க., நிகழ்ச்சியின்போது, 'தி.மு.க., மட்டும் தான் எங்களுக்கு எதிரி; ஆறு மாதம் பொறுத்திருங்கள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும்' என, பழனிசாமி திடுமென கூறினார். இதற்கிடையில், அவரது சம்பந்தி சுப்பிரமணியன் மீதான வழக்கில், பழனிசாமியின் மகன் மிதுன் வரை சிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.
அதேபோல, பழனிசாமி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க, செங்கோட்டையன் திடுமென களம் இறங்கி, பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பினார். கோவை மாவட்டம் அன்னுாரில் நடந்த, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், ஜெயலலிதாவின் படம் இல்லை என செங்கோட்டையன் குரல் எழுப்பி, அதிருப்தியை வெளிப்படுத்த, பின்னணியில் பா.ஜ., இருப்பதாக அறிந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனார் பழனிசாமி.
கூடவே, செங்கோட்டையனுக்கு, 42 மாவட்டச் செயலர்கள் மறைமுகமாக ஆதரவு கொடுக்க முன்வந்திருப்பதை அறிந்து, செய்வது அறியாமல் தவித்தார் பழனிசாமி. அ.தி.மு.க., மற்றும் தன்னை நோக்கி நடத்தப்படும் சம்பவங்கள் அனைத்தின் பின்னணியிலும் பா.ஜ., இருப்பதை உணர்ந்த பழனிசாமி, இதன் பின்பும், பா.ஜ.,வுடனான மோதலைத் தொடர விரும்பவில்லை.
தன் மீது லேசான வருத்தத்தில் இருந்த வேலுமணியை அழைத்த பழனிசாமி, பா.ஜ.,வுடன் சமாதானம் பேச பச்சைக் கொடி காட்டினார். இதையத்து, முன்னாள் நீதியரசர் மற்றும் சிலர் வாயிலாக, பா.ஜ.,வின் மேலிடத் தலைவர்களிடம் ரகசிய பேச்சுக்கள் நடந்தன. பா.ஜ., தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, அதை பழனிசாமி தரப்பும் ஏற்றுக் கொண்ட பின், டில்லிக்கு அழைக்கப்பட்டார் பழனிசாமி.
நேற்று முன்தினம் அவசரமாக டில்லிக்கு சென்ற பழனிசாமி, அங்கு கட்சியினருடன் சேர்ந்து அமித் ஷாவை சந்தித்து, இரண்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக பேசியுள்ளார்.
வலுவான 'ஸ்கெட்ச்'
இது குறித்து அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 'வரும் மார்ச் 31க்குள் கூட்டணி குறித்த முடிவை பழனிசாமி அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் வலியுறுத்தினர். 'அது நடக்காத பட்சத்தில், அ.தி.மு.க.,வுக்கு வேறு ஒருவர் பொதுச்செயலர் ஆக்கப்படுவார்; எங்களுடைய சாய்ஸ் செங்கோட்டையன்' என பா.ஜ., தரப்பில் சொல்லப்பட்ட தகவல் பழனிசாமியை சென்றடைந்தது.
அதோடு, சட்ட ரீதியாக, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கவும், தேர்தல் கமிஷன் வாயிலாக சில திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் பழனிசாமிக்கு தகவல் அனுப்பப்பட்டது. பழனிசாமி சம்பந்தியை, அமலாக்கத்துறை அல்லது ஐ.டி., மூலம் வளைக்கவும், பா.ஜ., தரப்பில் வலுவான 'ஸ்கெட்ச்' போடப்பட்டுள்ள தகவலும் கிடைக்கவே, பழனிசாமி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இப்படி அடுத்தடுத்து வந்து சேர்ந்த அதிர்ச்சித் தகவலை அடுத்தே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதென முடிவெடுத்து, டில்லி சென்று சந்தித்து திரும்பியுள்ளார் பழனிசாமி. இனி, இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம்.
பழனிசாமி - அமித் ஷா சந்திப்பில், பா.ஜ.,வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கையில், 26 முதல் 30 சதவீத தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வரும் சித்ரா பவுர்ணமி நாளில் பழனிசாமி, பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -