துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ஆர்.,; தி.மு.க., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ஆர்.,; தி.மு.க., கூட்டணிக்கு திடீர் நெருக்கடி
ADDED : ஆக 18, 2025 03:51 AM

சென்னை : துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளதால், தி.மு.க., கூட்டணிக்கு, திடீர் நெருக்கடி உருவாகி உள்ளது.
இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், தன் உடல் நலத்தை காரணம் காட்டி, பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணை ஜனாதிபதிக்கான தேர்தலை, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
'இண்டி' கூட்டணி தரப்பில், பொது வேட்பாளரை அறிவிக்க, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது, மஹாராஷ்டிரா கவர்னராக உள்ளார். இரண்டு முறை கோவை லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது, நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்பந்தம், தி.மு.க., கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின் நட்பு வளையத்தில் உள்ளவர். சமீபத்தில் முதல்வரின் வீட்டிற்கு சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
எனவே, முதல்வர் அவருக்கு ஆதரவளிப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஆதரவு அளித் தால், 'இண்டி' கூட்டணியில், சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.