வழக்கறிஞராக வருவோரில் 10ல் 7 பேர் தகுதியற்றவர்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கவலை
வழக்கறிஞராக வருவோரில் 10ல் 7 பேர் தகுதியற்றவர்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் கவலை
ADDED : ஜன 26, 2025 03:12 AM

சென்னை: ''சட்டக் கல்லுாரிகளில் படித்து விட்டு வழக்கறிஞராக வருவோரில், 10ல் 7 பேர், அதற்கான தகுதி இல்லாமல் இருக்கின்றனர்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.
மூத்த வழக்கறிஞர் ஏ.கே.மயில்சாமியின், 60 ஆண்டு கால பணியை பாராட்டும் நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், நேற்று நடந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.,யுமான ப.சிதம்பரம், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், மயில்சாமி குடும்பத்தினர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என, 200க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.
பாராட்டு
விழாவில், மயில்சாமிக்கு மலர்க்கொத்து வழங்கி, மாலை அணிவித்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:
வழக்கறிஞர் தொழிலில் சில புல்லுருவிகள் உள்ளதால், இந்த தொழில் கெட்டு விடாது. ஒரு வழக்கறிஞருக்கு, 3 கடமைகள் உள்ளன. முதலில் தன்னை தேடி வருபவர்களுக்கு வேண்டியதை செய்து தர வேண்டும்.
அப்படி வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து, அவருக்கு என்ன கிடைக்கும் என்பதை முதலில் சொல்லி விட வேண்டும். இரண்டாவது, எதிர் தரப்பிற்கும், மூன்றாவது நீதிமன்றத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள். இந்த மூன்றையும் செய்ய வேண்டும்; அது அறத்துடன் இருக்க வேண்டும்.
எல்லாம் தனக்கே என்று மனிதன் நினைக்கும்போதுதான் தவறு ஏற்படுகிறது. கல்லுாரிகளில் படித்துவிட்டு, வழக்கறிஞர் பணிக்கு வருவோரில், 10ல் 7 பேர் அதற்கான தகுதி இல்லாமல் இருக்கின்றனர்.
நாட்டில் 5 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. இதற்கு, வழக்கறிஞர்கள், அரசு, நீதிமன்றம் என, பல காரணங்கள் உள்ளன.
இதை ஒரு வழக்கறிஞராலோ அல்லது ஒரு நீதிபதியாலோ மாற்ற முடியாது. சமுதாய மாற்றம் தேவை. தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்து, தலைமை நீதிபதியிடம் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
வழக்கறிஞர் தொழில் என்பது முன்பு போல் இல்லாமல், போட்டி மிக்கதாக மாறி உள்ளது. இது ஆரோக்கியமானது; வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில், முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் வர முடியாத நிலை இருந்தது.
தற்போது, இந்த தொழிலுக்கு பல முதல் தலைமுறையினர் வருகின்றனர்.
அனைத்து தரப்பினரில் இருந்தும் முதல் தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாகி வருகின்றனர். வழக்கறிஞர்களில், 20 சதவீதம் பேர், இந்த தொழிலுக்கு தகுதி இல்லாதவர்களாக உள்ளனர் என்ற செய்தியை, அண்மையில் படித்தேன்.
மருத்துவ துறையை போல போலிகள் இல்லாத நிலையை ஏற்படுத்த, நீதிபதிகள் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
மனிதர்கள் இருக்கும் வரை, மருத்துவ தேவை இருக்கும். அதே போல், வழக்குகளும் இருந்தே தீரும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஒரு மேல்முறையீடு வழக்கு பதிவு செய்யப்பட்டால், அது விசாரணைக்கு வருவதற்கு, 31 ஆண்டுகளாகும்.
அந்த அளவிற்கு நாளுக்கு நாள் வழக்குகள் தேங்குவதாக, தலைமை நீதிபதி குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் வருமான வரித் துறை சட்டங்கள் சிக்கலாக உள்ளன. அதை ஒவ்வொரு பட்ஜெட் வாயிலாக, மத்திய நிதி அமைச்சர் மேலும் சிக்கலாக்குகிறார்.
அண்மையில் கொண்டு வரப்பட்ட மூன்று புதிய சட்டத் திருத்தங்கள், ஏற்கனவே இருந்த சட்டத்தில் 90 முதல் 95 சதவீத ஷரத்துகளை அப்படியே கொண்டுள்ளன.
புதிய நேரடி வரி விதிப்பு சட்டமும், பழைய சட்டத்தை அப்படியே 'காப்பி' செய்வது போல இருந்தால், எந்த பலனும் அளிக்காது. மாறாக, கூடுதலாக வழக்குகளை தான் உருவாக்கும்.
நடவடிக்கை
அரசு வருவாயை பெருக்குவதற்கு, பல வழிகள் உண்டு. தேனீக்கள் பூவில் இருந்து தேன் எடுப்பது போலவும் செய்யலாம். சுத்தியால் அடித்து பெறுவது போலவும் செய்யலாம். இந்திய வருமான வரி சட்டம், ஜி.எஸ்.டி., சட்டம் சுத்தியால் அடித்து பெறுவது போல தான் உள்ளது.
வழக்கை காட்டி வரி செலுத்துவோரை மிரட்டி, கூடுதலாக வரி செலுத்த வைக்கும் வகையில், இந்த சட்டங்கள் இருப்பதாக பாதிக்கப்படுவோர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் பேசுகையில், ''நீதிமன்றங்களில், 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 2 லட்சம் வழக்குகள், 30 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றன.
''நாடு பொருளாதார ரீதியாக வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் நிலையில், நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.