'உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை காக்கும் வரலாற்று சாசனம்'
'உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை காக்கும் வரலாற்று சாசனம்'
ADDED : ஏப் 28, 2025 05:49 AM

சென்னை : தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட, சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னரிடம் நிலுவையில் இருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், கவர்னர், ஜனாதிபதி ஆகியோர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு வெற்றிக்கு காரணமான, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு, தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில், முகுல் ரோஹத்கி தவிர மற்றவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், அவர்களுக்கு செங்கோல் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, கவர்னர் என்ற நியமன பதவி வாயிலாக கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த, தொல்லை கொடுக்கின்ற காலத்தில் மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
மகத்தான வெற்றி
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்த்திவாலா, மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு, தமிழகத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல. மக்களாட்சிக்கும், மாநில சட்டசபைகளின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப் பெரிய வெற்றி. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில், மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாக்கும் வரலாற்று சாசனமாக, இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இது இந்திய மாநிலங்களுக்கு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பெற்று தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை.
கூட்டாட்சி இந்தியா
இந்திய அரசியல் உரிமையை, சட்டப்பூர்வமான வாதங்கள் வாயிலாக, தமிழக அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்கு சொந்தகாரர்களான வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன்.
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற இலக்கை வென்றெடுக்க, இந்த தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. மாநில சுயாட்சியை பெறுவோம். கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.