சென்னையில் வசிக்க தகுதியற்ற கட்டடங்கள் கணக்கெடுப்பு; விபரீதம் கருதி இடித்து தள்ள மாநகராட்சி முடிவு
சென்னையில் வசிக்க தகுதியற்ற கட்டடங்கள் கணக்கெடுப்பு; விபரீதம் கருதி இடித்து தள்ள மாநகராட்சி முடிவு
ADDED : ஜன 17, 2025 01:31 AM

கடந்த பருவமழையின்போது, சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்குமுன், 2022ல் பாரிமுனையில் பழைய கட்டடம் இடிந்து, இரண்டு பேர் பலியாகினர்.
கடந்த, 2023ல், திருவல்லிக்கேணியில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் மற்றும் பாரிமுனை அர்மீனியன் தெருவில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமாயின.
இடிக்க ‛நோட்டீஸ்'
கடந்த, 2014ம் ஆண்டு பருவமழையில், சேப்பாக்கத்தில் ஒரு பழைய கட்டடம் இடிந்து விழுந்தது. அதன்பின், 2015, 2017ம் ஆண்டுகளில், சென்னை மாநகராட்சி சார்பில், பழைய கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. பாரிமுனை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், புரசைவாக்கம், ராயபுரம் உள்ளிட்ட பகுதியில், 300க்கும் மேற்பட்ட அபாயகரமான கட்டடங்கள் இருப்பது தெரிந்தது.
கட்டடத்தை இடிக்கும்படி, உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. ஆனால், பல உரிமையாளர்கள் கட்டடங்களை இடிக்கவில்லை. மீண்டும், 2022 நவம்பரில், மாநகராட்சி பதிவேட்டில் அபாயகரமானது என்று பதிவாகி இருந்த, 200 பெரிய கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டது. 'விபத்து அபாயம் உள்ளதால், அதில் வசிக்க வேண்டாம்; அலட்சியப்படுத்துவோர் மீது குற்றவியல் தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்தனர்.
மாநகராட்சி உத்தரவை ஏற்று, சிலர் மட்டுமே ஆபத்தான கட்டடங்களை இடித்தனர். அரசியல்வாதிகள் ஆதரவால், பெரும்பாலான உரிமையாளர்கள் கட்டடங்களை இடிக்கவில்லை. இன்னும் அவை அபாயகரமாகவே உள்ளன.
கடந்த ஆண்டு, 'பெஞ்சல்' புயலால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் எதிர்பாராத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், பழமையான பல கட்டடங்கள் மண்ணில் புதைந்தன. சென்னையில், பெஞ்சல் புயல் வீசி இருந்தால், பாதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும் என, அரசு அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
30 ஆண்டு பழமை:
சென்னையில், சிறியது, பெரியது என, 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள், ஆபத்தான நிலையில் வசிக்க தகுதியற்றவை என, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இதுபற்றிய துல்லியமான விபரங்கள் இல்லாததால், வார்டு வாரியாக பொறியாளர்களை வைத்து கணக்கெடுப்பு நடத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
-மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது: வசிக்க தகுதியற்ற கட்டடங்கள் இல்லாத நிலையை, அடுத்த பருவமழைக்கு முன் ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். இதற்காக, 30 ஆண்டுக்கு மேலான கட்டடங்கள் குறித்த விபரங்களை, வார்டு பொறியாளர்களை கொண்டு சேகரிக்க உள்ளோம். அந்த கட்டடங்களை, அண்ணா பல்கலை, ஐ.ஐ.டி., - மாநகராட்சி பொறியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்வர்.
அதில், வசிக்க தகுதியற்றவை என உறுதி செய்யப்படும் கட்டடங்களை இடிக்க, அவகாசம் வழங்கி, உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். மீறினால், உயிர், உடமை இழப்பை கருத்தில்கொண்டு, மாநகராட்சியே கட்டடத்தை இடித்துவிட்டு, அதற்கான செலவை உரிமையாளர்களிடம் வசூலிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர்-