'அப்படி பேசி பார்... அங்க நீ வந்து பார்... ' அண்ணாமலை கடும் ஆவேசம்; உதயநிதி செம கோபம்
'அப்படி பேசி பார்... அங்க நீ வந்து பார்... ' அண்ணாமலை கடும் ஆவேசம்; உதயநிதி செம கோபம்
ADDED : பிப் 21, 2025 06:38 AM

மும்மொழி விவகாரம், தமிழகத்தில் அனல் வீசத் துவங்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே மோதலையும், விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. துணை முதல்வர் உதயநிதியும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒருமையில் பேசி, சவால் விடும் அளவுக்கு வார்த்தை போர் முற்றி வருகிறது.
பின்னணி என்ன?
கரூரில் நேற்று முன்தினம் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது: 'தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போது, இதுவரை 'கோ பேக்' மோடி என, சொல்லி வந்தோம். இனி, 'கெட் அவுட்' மோடி என சொல்வோம்' என்று, துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார். நீங்கள் சரியான ஆளாக இருந்தால், பிரதமர் மோடியை, 'கெட் அவுட்' சொல்லி பாருங்கள். உங்கள் வீட்டுக்கு வெளியில், 'பால்டாயில் பாபு' என்று போஸ்டர் ஒட்டுவேன். ஒரு உலகத் தலைவரை மதிக்க தெரியாத கத்துக்குட்டி உதயநிதி.
தமிழகத்தில் மோசமான ஆட்சிக்கு வித்திட்டிருக்கும் அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவாமல் விட மாட்டேன். இதுதான் என்னுடைய மிக முக்கியமானப் பணி. மத்திய அரசு ஹிந்தி மட்டும் படிக்க வேண்டும் என எங்கும் கூறவில்லை. நீங்கள் விரும்பும் மொழியை படிக்கலாம் என, மத்திய அரசின் கல்விக் கொள்கையில் கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு, 1.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிகளில் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால், 2,500 கோடி ரூபாய் மத்திய அரசு தரவில்லை என்கின்றனர். தமிழகத்தில் தற்குறித்தனமாக ஆட்சி நடத்துகின்றனர். அதை சொன்னால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அவர்களின் கட்சியினர் கோபப்படுகின்றனர். அவர்கள் கோபப்படுவதற்காக உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு, உதயநிதியையும், அமைச்சர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அளித்துள்ள பதில் விபரம்:
* துணை முதல்வர் உதயநிதி:
மரியாதை இல்லாமல், அரசியல் கட்சித் தலைவர்களை, அண்ணாமலை ஒருமையில் பேசுகிறார். தமிழகம் கேட்கும் நிதியை, மத்திய அரசிடம் இருந்து வாங்கி கொடுக்க துப்பில்லை. என் வீட்டு முன்பாக போஸ்டர் ஒட்டுவேன்; அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் விட மாட்டேன் என்றெல்லாம், சவால் விட்டிருக்கிறார். பதில் சவால் விடுக்கிறேன். தைரியம் இருந்தால், அண்ணா சாலை பக்கம் வந்து பார்.
* அமைச்சர் மா.சுப்பிரமணியன்:
முதல்வர், துணை முதல்வரை, அரசியல் அரைவேக்காடு அண்ணாமலை ஒருமையில் பேசுவது, அரசியல் அநாகரிகத்தின் உச்சம். துணை முதல்வர், அமைச்சர் ஆகியோரை, 'தற்குறி' என சொல்லும் அளவுக்கு, கீழ்த்தரமாகவும், தற்குறித்தனமாகவும் செயல்படுகிறார். அவர் கண்ணாடி முன் நின்றால், அவரது தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைகட்டி நிற்கும்.
* அமைச்சர் ரகுபதி:
அண்ணாமலைக்கு ஒருமையும் தெரியாது; பன்மையும் தெரியாது. அவர், எப்படித்தான் ஐ.பி.எஸ்., படித்தாரோ. பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை. கூட்டணி பலம் இல்லாத ஆதங்கத்தில் தான் அண்ணாமலை ஏதேதோ பேசுகிறார்.
* அமைச்சர் சிவசங்கர்:
அண்ணாமலை ஒரு விளம்பர விரும்பியாக இருக்கிற காரணத்தால்தான், தடித்த வார்த்தைகளை பேசுகிறார். பொது இடங்களில் சொல்ல முடியாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். விளம்பர வெளிச்சத்திற்காக, எதையும் பேசலாம் என்று நினைப்பது, எந்த மாதிரியான அணுகுமுறை எனத் தெரியவில்லை. தமிழக பா.ஜ.,வில் அவர் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கிறார். அதனால், தன் இடத்தை தக்க வைக்க, முதல்வரையும், துணை முதல்வரையும் ஒருமையிலும், அவதுாறாகவும் பேசுகிறார்.
* அமைச்சர் சேகர்பாபு:
எல்லாரையும் மரியாதையின்றி பேசும் அண்ணாமலை, முதலில் சட்டசபை தேர்தலில் நிற்கட்டும். அப்படி நின்றால், அதே தொகுதியில் தி.மு.க.,வின் கடைகோடி தொண்டனை நிறுத்தி, அவரை வீழ்த்துவோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வாக வரட்டும் பார்க்கலாம்.
- நமது நிருபர் -