UPDATED : பிப் 09, 2024 03:27 AM
ADDED : பிப் 09, 2024 01:32 AM

சென்னை: பா.ஜ., மேலிட தலைவர்களுடன் மட்டுமே கூட்டணி பேச்சு நடத்துவது என்பதில், பா.ம.க., உறுதியாக இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள அ.தி.மு.க., தரப்பு, பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. அதேபோல், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ.,வும் முயற்சித்து வருகிறது.
ஆனால், புதிய நீதிக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தவிர, மற்ற கட்சிகள் பா.ஜ., கூட்டணியில் இணையவில்லை. இந்நிலையில், கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2014 முதல் பா.ஜ.,வுடன் இணக்கமாக இருந்தும், பா.ம.க.,வுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. எனவே, இந்த முறை முன்கூட்டியே சில உறுதிமொழிகளை பெற வேண்டும் என்பதில், ராமதாஸ், அன்புமணி இருவரும் உறுதியாக உள்ளனர்.
எனவே, கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலைவர் நட்டா அல்லது அவர்களின் நேரடி பிரதிநிதிகளிடம் மட்டுமே பேச வேண்டும் என்பதிலும், ராமதாஸ், அன்புமணி உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

