ADDED : பிப் 22, 2026 04:12 AM

புதுடில்லி: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிகள் ஏறக்குறைய முடிவாகிவிட்டன. தி.மு.க., ஒரு பக்கம், அரசு பணத்தை மக்களுக்கு இலவசம் என அறிவித்து, கட்சி பணத்தை காப்பாற்றி வரும் நிலையில், அ.தி.மு.க.,வோ ஏகத்துக்கும் இலவசங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம், தமிழக தேர்தலைக் கண்காணிக்க, டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ஒரு அறை தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை, 'தமிழக வார் ரூம்' என்கின்றனர். இதில், தமிழகத்தின் வரைபடம் சுவரில் பெரிதாக மாட்டப்பட்டு உள்ளது.
எந்தெந்த மாவட்டங்களில், பா.ஜ.,விற்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்பதை வண்ண குறியீடுகள் வாயிலாக குறிப்பிட்டு உள்ளனர். அதே சமயம், எந்தெந்த மாவட்டங்களில் பா.ஜ.,வின் நிலை சரியில்லையோ, அங்கெல்லாம் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக தேர்தல் என்றாலே, வழக்கமாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழகம் வருவார்; இந்த முறை, பா.ஜ., ஆட்சி செய்யும் ஐந்து மாநில முதல்வர்கள், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனராம். 'யார் யார் எந்தெந்த மாவட்டத்தில் பிரசாரம் செய்ய வேண்டும்' என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளாராம், தேசிய பொதுச்செயலர் சந்தோஷ். இதைத் தவிர தமிழ் பேசக்கூடிய வடமாநில பா.ஜ., தலைவர்கள் சிலர், பழனிசாமியுடன் பிரசாரம் செய்ய இருக்கின்றனர். இவையெல்லாம், பா.ஜ., புதிய தலைவர் நிதின் நபின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறதாம்.

