தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/சட்டசபை நேரலையில் மூழ்கியது தமிழகம்!

சட்டசபை நேரலையில் மூழ்கியது தமிழகம்!

சட்டசபை நேரலையில் மூழ்கியது தமிழகம்!


ADDED : செப் 04, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப த.வெ.க. அரசு எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. ஒளிவு மறைவு இல்லாத அரசு நிர்வாகத்தை வழங்குவதற்கான முதல் படி என கூறலாம். ஆனால், பொதுமக்கள் சட்டசபை நிகழ்ச்சிகளை பார்க்கிறார்களா? பார்த்தால் அதுபற்றி என்ன நினைக்கிறார்கள்? இந்த கேள்விகளை மக்களிடமே கேட்டோம்...

உருப்படியான 2 பேர்


சட்டசபை நிகழ்வை தொடர்ந்து பார்க்கிறேன். இப்போதுதான் உண்மை வெளி வருகிறது. மக்கள் பிரச்னைகளை பேசாமல் தி.மு.க. உறுப்பினர்கள் டேபிள், சேர் எல்லாம் நாங்கள் அமைத்தோம் என்று அவர்களின் பெருமைகளை மட்டுமே பேசுகிறார்கள். அரசு பணத்தில் எம்.எல்.ஏக்கு கார் வேண்டுமா என கேட்கிறார்கள். அரசு பணத்தில் கருணாநிதிக்கு ஏன் நினைவு சின்னம் என கேட்டால் பதில் இல்லை. எதிர்க்கட்சியில் பா.ம.க சௌமியா, அ.ம.மு.க காமராஜ் மட்டுமே மக்கள் நலன் சார்ந்து பேசுகிறார்கள்.

--சகாபுதீன், கரும்புக்கடை.

எல்லாம் அம்பலமாகிறது


நேரம் கிடைக்கும்போது தவறாமல் சட்டசபை நிகழ்வுகளை பார்க்கிறேன். பழைய ஆட்சியில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளியிட்டனர். இப்போது நேரடியாக ஒளிபரப்புவதால் எல்லாரை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் நிறைய கேள்வி கேட்கிறார்கள். அதற்கு த.வெ.கவினரை பதிலளிக்க விடாமல் பிரச்னை செய்கிறார்கள். மக்கள் பிரச்னைகளை பற்றி தி.மு.க., அ.தி.மு.க பேசுவதில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.

-ரமேஷ், செல்வபுரம்.

தராதரம் புரிகிறது


கோயிலில் வேலை செய்கிறேன். பூஜை இல்லாத நேரங்களில் சட்டசபை நிகழ்ச்சிகள் பார்க்கிறேன். சில நேரங்களில் எம்.எல்.ஏ.,க்களின் காமெடி பேச்சும், கோபமாக கத்துவதும் சுவாரசியமாக இருக்கிறது. முன்பு நேரடியாக ஒளிபரப்பாமல், அவர்களுக்கு வேண்டியதை மட்டும் பதிவு செய்து ஒளிபரப்பியதால் சுவாரசியம் இல்லை. இப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இரண்டையும் உள்ளது உள்ளபடி காட்டுவதால், எம்.எல்.ஏ.க்களின் தராதரம் மக்களுக்கு புரிகிறது.

---அசோக்குமார், கவுண்டம்பாளையம்.

வரட்டும் கேட்கிறோம்


எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. என்ன பேசுகிறார் என்பதை பார்க்கலாம் என்று நினைத்தேன். எல்லா தொகுதி உறுப்பினர்களும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. சீரியல் பார்த்து பொழுது போக்குவதை காட்டிலும் இது உருப்படியான விஷயம் தான். ஆனால், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வு பலருக்கு இருப்பதாக தெரியவில்லை. பைசா பிரயோசனம் இல்லாத விஷயம் எல்லாம் பேசுகிறார்கள். தொகுதிக்கு போகும்போது மக்கள் கேட்டால் மாறுவார்கள்.

-திருவேங்கடம், அன்னுார்.

பேசி பழக வேண்டும்


சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பை தினசரி ரெகுலராக பார்க்க முடிவதில்லை. ஒர்க் இல்லாத நேரத்தில் கவனிக்கிறேன். எதிர்கட்சிகளின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை. அதனால் வேறு ஏதாவது பழசை கிளறி, திசை திருப்புவதால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கின்றனர். மற்றவர்களும் பேசி பேசி பழகி கொண்டால் அந்தந்த தொகுதி மக்கள் புரிந்து கொள்வார்கள்.

--மோகனகிருஷ்ணன், வடவள்ளி.

அரசியல் விழிப்புணர்வு


நேரடி ஒளிபரப்பால், மக்களிடம் நல்ல அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை மக்களிடம் துாண்டியுள்ளனர். வீடுகளில் சீரியலை போலும், கடைகள் அலுவலகங்களில் ஒன்டே மேட்ச் போலவும் தொடர்ந்து பார்க்கின்றனர். டீக்கடை, பஸ்களிலும் எல்லாரும் பார்க்கிறார்கள். எந்த அமைச்சர் எப்படி பாடினார், பேசினார் என்றும் மிமிக்ரி செய்கின்றனர். இது ரொம்ப ஆரோக்கியமானது. தொடர வேண்டும்.

--பாலகிருஷ்ணன், கவுண்டம்பாளையம்.

குட்டீஸ் பாக்றாங்க


சட்டசபை நிகழ்வுகளை தினம்தோறும் போனில் பார்க்கிறோம். வேலைக்கு நடுவில் எப்போது நேரம் கிடைத்தாலும் அதைத்தான் பார்க்கிறோம். டிவியில் போடும்போது, குழந்தைகளும் எங்களோடு சேர்ந்து அதை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கும். போரடிக்கவில்லை. அரசியல் என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தோம், இப்போது நேரலையில் பார்த்த பிறகு தான் அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது.

--சித்ரா, சத்தி.

இன்ட்ரஸ்டிங்கா இருக்கு


போனில் வரும் சட்டசபை தொடர்பான ரீல்ஸ், ஷார்ட்ஸ் நேரம் இருக்கும் போது பார்ப்பேன். நேரலையை முழுமையாக பார்க்க நேரம் இல்லை. நாம் ஓட்டு போட்டு சட்டசபைக்கு அனுப்பிய ஆள் என்ன பேசுகிறார் என்று தெரிந்து கொள்ளலாமே என்ற ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது அனைவருடைய பேச்சையும் பார்த்து வருகிறேன். சட்டசபைல என்ன நடக்குதுனு ஓப்பனா காட்றது நல்ல விஷயம். பார்க்க பார்க்க இன்ட்ரஸ்டிங்காவும் இருக்கு.

-கலாதேவி, காந்திபுரம்.

துதி பாடுகிறார்கள்


சட்டசபை நேரலையை பகலில் பார்க்க எனக்கு வாய்ப்பு இல்லை. கூலி வேலை முடிந்து மாலையில் அன்றைய பதிவுகள் முழுவதையும் பார்க்கிறேன். த.வெ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு புதுசு என்றாலும், திராவிட கட்சியினருக்கு நல்லாவே பதிலடி கொடுக்கிறார்கள். சபை உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரிவதால், யார் ஓட்டு போட்ட மக்களுக்காக பேசுகிறார்கள்; யார் கொத்தடிமையாக துதி பாடுகிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அடுத்த தேர்தலில் அதற்கு தகுந்த பரிசை நாம் கொடுக்க முடியும்.

-சிவா, சிங்காநல்லுார்.

சபாநாயகருக்கு சலாம்


சட்டசபையில் நடப்பதை அப்படியே டீவியில் காட்டுவது நன்றாக இருக்கிறது. ஆனால் பல விஷயங்கள் புரிவது இல்லை. அதனால் ரொம்ப நேரம் நேரலை பார்க்க மாட்டேன். பலரும் அந்த பேச்சுகளை துண்டு துண்டாக வெட்டி, சுருக்கமாக ரீல்ஸ் ஆக்கி சோஷியல் மீடியாவில் போடுவதை விடாமல் பார்ப்பேன். நேரலையை விட அந்த ரீல்ஸ் பார்க்க இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. சபாநாயகர் பிரபாகரன் நல்லாவே சட்டசபையை நடத்துகிறார்.

-கார்த்திக்ராஜா, செல்வபுரம்.

நினைச்சே பாக்கலங்க


வீட்டில் டி.வி போட்டால், சீரியல், காமெடி என ஓடி கொண்டிருக்கும். என் வேலைகளை கவனித்தபடியே அதையும் பார்ப்பது வழக்கம். இப்போது சட்டசபை நேரலை தான் அதிக நேரம் பார்க்கிறேன். நிறைய புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நினைத்தே பார்க்கவில்லை, நானெல்லாம் சட்டசபையில் நடப்பதை பார்க்க முடியும் என்று. அரசாங்கம் எப்படி நடக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. உள்ளது உள்ளபடியே காட்டுவது மகிழ்ச்சி.

--பவித்ரா, எல்.ஐ.சி. காலனி.

கொஞ்சம் குழப்பம்ங்க


எனக்கு எப்போலாம் நேரம் கெடைக்கிதோ அப்போ மொபைல்ல பாப்பேன். மக்களோட பிரச்னைகள எல்லாம் ரொம்ப பேரு எடுத்து பேசுறது கேக்க நல்லா இருக்கு. அரசாங்கம் அதெல்லாம் சரி செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும். தெரிஞ்சுகிட்டே ஏன் சரி செய்யாம இருக்குனு யோசிப்பேன். சில பேர் மட்டும் நல்லா பேசுற மாதிரி தெரியுது. ஆனா அது கேட்ட கேள்விக்கு பதில் இல்லைன்னு எதிர்க்கட்சி ஆளுக சொல்லும்போது கொஞ்சம் குழப்பமா இருக்கும். ஆனா போரடிக்காம ரசிக்கலாம்.

--அழகேசன், கவுண்டம்பாளையம்.

அடையாளம் தெரியுது


மொபைல்லயும் பாப்பேன், டிவிலயும் பாப்பேன். சட்டசபை கேள்விநேரம் நல்லாருக்கு. என்னலாம் நடக்குதுனு உடனுக்குடன் தெரிஞ்சிக்க முடியுது. நேரடி ஒளிபரப்பு நிச்சயமா நல்ல விஷயந்தான். முன்னாடிலாம் பேப்பர வாங்கி படிச்சுதான் தெரிஞ்சிக்கனும். அதுலயும் முழுசா வராது. அவங்களுக்கு புரிஞ்சத மட்டும் சுருக்கமா போடுவாங்க. பாதிதான் வரும். ஆனா இப்போ நேரலையா காட்றதால, யார் யாரு என்ன சொன்னாங்கன்னு தெரிஞ்சிக்க முடியுது.

-பழனிச்சாமி, சத்தியமங்கலம்.

பெண்களின் விவாதம்


சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் தொடர்ந்து பார்ப்பதில்லை. அவ்வப்போது பார்த்துக் கொள்கிறேன். சமூக ஊடகங்களில் உடனுக்குடன் வருவதால் அதை முழுமையாக கவனிக்கிறேன். இதற்கு முன் சட்டசபை செய்தி, அரசாங்க அறிவிப்புகளை எல்லாம் இவ்வளவு ஆர்வத்துடன் கவனித்தது இல்லை. காலை நேரம் பெரும்பாலும் சிரீயல் இருக்காது என்பதால் எங்கள் வீட்டில் பெண்கள் கூட சட்டசபை நிகழ்ச்சிகளை ஆர்வமாக பார்க்கிறார்கள். அதை பற்றி விவாதிக்கிறார்கள்.

-ராஜன், கரும்புகடை.

நல்ல பொழுதுபோக்கு


சட்டசபை நேரலையை டைம் இருக்கும்போது எல்லாம் பார்ப்பேன். சில விஷயங்கள் புரியலை என்றாலும் பாக்க சுவாரசியமா தான் இருக்கு. ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் என்ன பேசுறாங்க, எதுக்கு அப்படி பேசுறாங்கனு லேசா புரிபட ஆரமிச்சிருக்கு. பள்ளிக்கூடம் மாதிரி தான் சட்டசபை இருக்கு. ஆசிரியர் மாதிரி சபாநாயகர் உட்கார்ந்துகிட்டு உறுப்பினர்கள கன்ட்ரோல் பண்றது பாக்க ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கு. மத்த நிகழ்ச்சிகள விட இது நல்லாவே இருக்கு.

-பேபி, கரும்மத்தாம்பட்டி.

சஸ்பென்ஸ் இருக்கு


ஆட்டோ ஓட்றேன். சவாரி இல்லாம ப்ரீயா இருக்கும்போது மொபைல்ல சட்டசபை பார்ப்பேன். வீட்டுல இருக்கும்போது டி.வி.ல பார்ப்பேன். தினமும் விடாம பாத்துட்டு இருக்கேன். டி.வி.ல லைவ் ஷோ நிறைய பாக்ற பழக்கம் உண்டு. லைவா இருந்தாலும் அதெல்லாம் செட்டப் செஞ்சு நடத்துறாங்க. ஆனா சட்டசபை அப்படி இல்ல. அதனால் அடுத்த சீன் எப்படி இருக்கும்னு தெரியாம சஸ்பென்சா போறத பார்க்க விறுவிறுப்பா இருக்கு. நல்லா பொழுது போகுது.

-ரஞ்சித் குமார், காந்திபுரம்.

சண்டைலாம் சகஜம்ங்க


சட்டசபை கூட்டத்தொடரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொபைல் போனில் பார்ப்பேன். சிந்திக்க வைக்குது. அங்கு என்ன நடக்குமென்பது இதற்கு முன் தெரியாது. கட்சிக்காரங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போட்டுக்கிறது வாஸ்தவம் தானே. அதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டியதில்லை. இவுங்க அவுங்களை குறை சொல்லுவாங்க; அவுங்க இவுங்களை குறை சொல்லுவாங்க. இதெல்லாம் வாடிக்கை தானே. எங்கள கேட்டா, இலவசத்தை ஒழிச்சிட்டு, லஞ்சமில்லாத ஊழலற்ற ஆட்சி நடத்துனா போதுமுங்க.

-குமார், காட்டூர்.

சைலன்ட் முதல்வர்


சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பு செய்வதால், மொபைலில் நாள் தவறாமல் பார்க்கிறேன். மூன்று கட்சிகளும் மூன்று மாதிரி பேசுகிறார்கள். முதல்வர் மட்டும்தான் எப்போதும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். எந்த முன் அனுபவமும் இல்லாத த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் பேசும் போது காமெடியாக இருக்கிறது. அதனால் தான் சோசியல் மீடியாவில் த.வெ.க.வை ரொம்ப கலாய்கிறாங்க. போகப்போக முன்னேற்றம் வந்தா நிகழ்ச்சிகள் ரசிக்கிற மாதிரி இருக்கும்.

-ஹேமநாத், கணபதி.

வகுப்பு நடத்துங்க


விஜய் முதல்வர் ஆனதில் இருந்து, அரசியல் மேல ஆர்வம் வந்திருக்கு. முன்னெல்லாம் பிடிக்காது. இப்போ சட்டசபை நிகழ்ச்சியை விடாம பார்த்து கொண்டிருக்கிறேன். த.வெ.க. உறுப்பினர்களுக்கு அனுபவம் இல்லை என்பது பேச்சில் தெரிகிறது. அவர்களுக்கு சீனியர் அரசியல்வாதிகள் மூலமாக வகுப்பு நடத்தி பயிற்சி அளித்தால் பலன் இருக்கும். மற்றபடி ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டும் விமர்சனம் செய்து கொண்டும் இருப்பது பார்க்க அலுப்பாக இருக்கிறது.

-ஈஸ்வர், கணபதி மாநகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us