தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு; கடும் குழப்பத்தில் கட்சி மேலிடம்
தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு; கடும் குழப்பத்தில் கட்சி மேலிடம்
UPDATED : பிப் 08, 2025 03:24 AM
ADDED : பிப் 07, 2025 06:38 PM

தமிழக பா.ஜ., தலைவரை தேர்வு செய்வதில், அக்கட்சி மேலிடம் பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும், தேசிய தலைவர் தேர்வான பின்னரே, தமிழக தலைவருக்கான தேர்தல் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பா.ஜ., உட்கட்சி தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் துவங்கி நடந்து வருகிறது. தேசிய தலைவர் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநில தலைவர் தேர்தலும்தான் நடக்க உள்ளன.
தமிழக பா.ஜ., தலைவர் தேர்தலை, கடந்த ஜனவரிக்குள் நடத்தி முடிப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பல மாநிலங்களில், ஏற்கனவே உள்ள மாநில தலைவர்கள், எந்த சிக்கலும் இன்றி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
'இண்டி' கூட்டணியில் உள்ள, தி.மு.க., போன்ற கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என, எங்கள் கட்சி மேலிடம் நினைக்கிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால், பா.ஜ.,வுக்கும், மத்திய அரசுக்கும் அதிக குடைச்சல் கொடுப்பர்.
பா..ஜ.,வுக்கு எதிரான, 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் அனைத்து முயற்சிகளை மேற்கொள்வார். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் அல்லது தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையை ஏற்படுத்த வேண்டும் என, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நினைக்கின்றனர்.
இது நடக்க வேண்டுமானால், தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிராக, வலுவான கூட்டணி அமைய வேண்டும். அ.தி.மு.க., இல்லாமல், வலுவான கூட்டணி சாத்தியமில்லை. ஆனால், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்பதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என்பதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் பிடிவாதமாக உள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்கும் நோக்கத்திலேயே, கட்சிக்கு புதியவரான அண்ணாமலையை, மாநில தலைவராக்கினர். அதற்கு ஓரளவு பலன் கிடைத்திருப்பதாக நம்பும் பா.ஜ., மேலிடம், அவரையே தலைவராக தொடரச் சொல்கிறது. ஆனால், தி.மு.க.,வை வீழ்த்த, எந்த முடிவுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது.
ஆனால், 'நான் தலைவரானால், அ,தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பில்லை' என்கிறார் அண்ணாமலை. அ.தி.மு.க., இல்லாமல், வலுவான கூட்டணி அமைக்க முடியும் என்ற வாதத்தை, பா.ஜ., மேலிடம் ஏற்க மறுக்கிறது.
தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்கள், 'அ.தி.மு.க., இல்லாத கூட்டணியால், தி.மு.க.,வை வீழ்த்த முடியாது' என்கின்றனர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லாத நிலையில், பா.ஜ., மோசமான தோல்வியை சந்திக்கும். அதிலிருந்து தப்பிக்கவே அண்ணாமலை நிபந்தனைகள் விதிப்பதாக, மூத்த தலைவர்கள், மேலிடத்தில் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் மேலிடம் உறுதியாக இருந்தால், கட்சியின் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரனையோ, மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனையோ தலைவராக்கி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றும், சிலர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலையை மாற்றினால், தமிழகத்தில் பா.ஜ.,வால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டது போலாகி விடும். புதிதாக ஒருவர் தலைவரானால், 10 மாதங்களில் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்துவது கடினம். எனவே, அண்ணாமலையே தொடர வேண்டும். ஆனாலும், தி.மு.க.,வை வீழ்த்த எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், அவர் ஏற்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது.
இதில் ஒரு இணக்கம் ஏற்படாததால், மேலிடம் குழப்பத்தில் உள்ளது. அதனால்தான் தமிழக பா.ஜ., தலைவர் தேர்தல் தாமதமாகி வருகிறது. புதிய தேசிய தலைவர் தேர்வான பின், தமிழக பா.ஜ., தலைவர் தேர்வு குறித்து முடிவெடுக்க, மேலிடம் இப்போதைக்கு முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
--நமது நிருபர்-