தமிழக காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
தமிழக காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
UPDATED : ஜன 03, 2026 04:43 AM
ADDED : ஜன 03, 2026 04:15 AM

- நமது நிருபர் -
'ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என, கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி ஆவேசமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
எந்த ஒரு அரசியல் கட்சியும், தன் கட்சி எம்.பி.,யை, தேர்தல் நேரத்தில், தேர்தல் கமிஷனுக்கு, ஓட்டுச்சாவடி முகவர் பட்டியலைக்கூட கொடுக்க விடாமல் முடக்க நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது. தமிழக காங்கிரசில் நடக்கும் விஷயங்கள், மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்து போகச் செய்ய நடக்கும் முயற்சிகள், மிகுந்த வேதனை அளிக்கின்றன.
மனச்சோர்வு
தினமும், தமிழக காங்கிரஸ், மக்கள் பிரச்னைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது. தமிழகம் எந்த காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடம் எதிர்நோக்கி உள்ளது.
இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழக காங்கிரசில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தொடரும் உட்கட்சி பிரச்னைகள், மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன.
சித்தாந்த ரீதியான அரசியலை வலுவாக முன்னெடுக்கவில்லை. மக்கள் பிரச்னைகள் குறித்து பேசாமல், வெறும் கூட்டல் - கழித்தல்களை மட்டுமே செய்து, ஒரு சிலரின் சுயநலத்துக்காக, தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இதை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது என்பதை, உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.
ராகுலின் தன்னலமற்ற, கொள்கை பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு, நேர் எதிரான பாதையில் தமிழக காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்புக்கும், ஒப்பற்ற தியாகத்துக்கும், நாம் துரோகம் செய்ய முடியாது.
ஆதங்கம்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளம், மரியாதை என்பது, காமராஜர் கட்டிக் காத்த பாரம்பரியத்துக்கும், நேரு, காந்தி குடும்பத்தின் தியாகத்துக்குமான, தமிழக மக்களின் அன்பும், மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் குறித்த தன் ஆதங்கத்தை ஜோதிமணி எம்.பி., அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தாலும், காங்., கட்சியை யார் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வது என பெயர் குறிப்பிடாமல் சொல்லி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரசாரிடம் விசாரித்தபோது, 'தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையைத் தான், ஜோதிமணி பெயர் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்' என தெரிவித்தனர்.

