தமிழக பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?
தமிழக பொருளாதார ஆய்வறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?
ADDED : மார் 14, 2025 04:29 AM

சென்னை : 'அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்க, கிராமப்புற தொழில் முனைவோரை வளர்ப்பதில், தமிழகம் கவனம் செலுத்த வேண்டும்' என, தமிழக பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக திட்டக்குழு வாயிலாக, மாநில பொருளாதார ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* 2021 - 22 முதல், 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தை, தமிழகம் எட்டி வருகிறது. இது, 2024 - 25ம் ஆண்டிலும், தொடர்ந்து தக்க வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
* நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 4 சதவீதமும், மக்கள்தொகையில் 6 சதவீதமும் மட்டுமே கொண்ட தமிழகம், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2023 - 24ம் ஆண்டு, 9.21 சதவீதம் பங்களித்துள்ளது
* தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி, தொடர்ந்து பல ஆண்டுகளாக, தேசிய சராசரியை விட அதிகமாகவே இருந்து வருகிறது. இது, 2022 - 23ம் ஆண்டு 2.78 லட்சம் ரூபாயாக இருந்தது. தேசிய சராசரியான 1.69 லட்சம் ரூபாயை காட்டிலும், 1.64 மடங்கு அதிகம். நாட்டின் தனிநபர் வருமானத்தில், தமிழகம் நான்காம் இடம் வகிக்கிறது
* ஒரே பெருநகரத்தை மட்டும் மையமாக கொண்ட மஹாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை போல அல்லாமல், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, மாநிலம் முழுதும் உள்ள நகர்ப்புற மையங்களில் பரவலாக்கப்பட்டு உள்ளது.
கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்கள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதுடன், நகர்ப்புறம் - ஊரக இடைவெளியை குறைக்கவும் உதவுகின்றன
* தமிழகத்தை 2030க்குள், 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக எட்டுவதே இலக்கு. இதை வெற்றிகரமாக தமிழகம் எதிர்க்கொண்டு இலக்கை அடையும்
* அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்க, கிராமப்புற தொழில் முனைவோரை வளர்ப்பதில், தமிழகம் கவனம் செலுத்த வேண்டும்.
இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல், வேலையில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவித்தல், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் மட்டுமின்றி, மக்கள்தொகை சார்ந்த அனுகூலங்களையும், தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
* தமிழகத்தில் 2019 - 20ம் ஆண்டில், 6 சதவீதமாக இருந்த நகர்ப்புற பணவீக்கம், ஜனவரி வரை, 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம், 5.4 சதவீதமாக தொடர்ந்து உள்ளது. கிராமப்புற பணவீக்கம் தான், மாநிலத்தின் ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் இயக்குகிறது
* பணவீக்கம் என்பது பெரும்பாலும் பணவியல் தொடர்பான நிகழ்வு தான் என்றாலும், மக்களின் வாங்கும் சக்தியை படிப்படியாக அது குறைத்து விடுகிறது. இது, மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மின்சாரம் ஆகியவற்றை, மானிய விலையில் வழங்குவதன் வாயிலாகவும், மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்கள் வாயிலாகவும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
* வணிக வங்கிகள் வழங்கும் விவசாய கடன் பெறுவதில், தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இது, 2019 - 20ம் ஆண்டு, 1.83 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 2023 - 24ம் ஆண்டு, 3.58 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
* தமிழகம் மிகச்சிறந்த தொழில் துறை ஆற்றல் மையமாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தின் உற்பத்தி துறை, 11.9 சதவீதம் பங்களிக்கிறது. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில், நாட்டில் முன்னணியில் தமிழகம் உள்ளது
* 2019 முதல் 2024 வரை, தமிழகத்தின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன், 2.5 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 3.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அன்னிய நேரடி முதலீடுகள், 5,909 கோடி ரூபாயில் இருந்து, 20,157 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
* தமிழகத்தின் வறுமை நிலை, 2005 - 06 முதல் 2022 - 23ம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில், 36.5 சதவீதத்தில் இருந்து, 1.43 சதவீதமாக குறைந்துள்ளது. இந்திய அளவில், 55.3 சதவீதத்தில் இருந்து, 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.
* நிடி ஆயோக் வெளியிட்ட அறிக்கைப்படி, பள்ளிக்கல்வி தரநிலை குறியீட்டில், கேரளாவுக்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது. மேல்நிலை கல்வியை தொடர முடியாமல் இடைநிற்றல் வீதம், தமிழகத்தில் 4.5 சதவீதமாக உள்ளது. தேசிய சராசரி அளவில், 12.6 சதவீதமாக உள்ளது
தமிழகம், 2030 வரையிலான செயல் திட்டம் வாயிலாக, காலநிலை சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது. நகர்ப்புற வெள்ளங்கள், வெப்ப அலைகள், பல்லுயிர் இழப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள, பசுமை உள்கட்டமைப்பும், கடலோர சுற்றச்சூழல் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.