ரூ.7,351 கோடி பாக்கியால் திணறும் மின் வாரியம்; தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
ரூ.7,351 கோடி பாக்கியால் திணறும் மின் வாரியம்; தமிழக உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்
UPDATED : ஜன 23, 2025 02:54 AM
ADDED : ஜன 22, 2025 11:47 PM

தமிழக உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகளின் அலட்சியத்தால், 7,351 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கியால், மின் வாரியம் திணறி வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சி, 138 நகராட்சி, 529 டவுன் பஞ்சாயத்து, 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளில், குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்சாரம் வினியோகிக்கப் படுகிறது.
பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீர் வாரியம் போன்றவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
துண்டிப்பு
ஆனால், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட அரசு துறைகள், மின்வாரியத்துக்கு முறையாக, மின் கட்டணத்தை செலுத்துவதில்லை. ஏற்கனவே தமிழக மின் வாரிய நிதி நிலை மிக மோசமாக உள்ளது. இதை காரணம் காட்டி, தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
வீட்டு இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுத்த 20 நாட்களுக்குள், கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் மின்சாரம் துண்டிக்கப்படும்.
பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படும். இதனால் தனி நபர்கள், குறித்த காலத்தில் கட்டணம் செலுத்துகின்றனர்.
ஆனால், 60 நாட்கள் அவகாசம் அளித்தும், உள்ளாட்சி அமைப்புகள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தாமல் உள்ளன. அதேபோல, குடிநீர் வாரியம் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும், மின் கட்டணத்தை சரிவர செலுத்துவதில்லை.
கடந்த, 2022 - 24 வரை, தண்ணீர் இல்லாத ஆழ்துளை குழாய் கிணறுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் குறித்து கணக்கெடுத்து, 1,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. பல இணைப்புகளை துண்டிக்க, உள்ளாட்சி அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளன.
அந்த இணைப்புகளுக்கு மின் கட்டண பாக்கி உள்ளதால், மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை.
ரூ.1.90 லட்சம் கோடி கடன்
தமிழக மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்பிரமணி கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர், தெருவிளக்கு போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள, 5.68 லட்சம் மின் இணைப்புகளில், 3,016 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளது.
குடிநீர் வாரியம், பள்ளி, விடுதி, மருத்துவமனை, அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு துறைகளை சேர்த்து, 1.07 லட்சம் மின் இணைப்புகளில், 4,335 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி உள்ளது.
இதில், குடிநீர் வடிகால் வாரியம் மட்டும், 9,000 இணைப்புகளில், 1,900 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. உள்ளாட்சி அமைப்பு, அரசின் பிற துறைகள் என, தமிழக அரசு மூலம் செலுத்த வேண்டிய மின் கட்டணம், 7,351 கோடி ரூபாய் உள்ளது.
கடந்த 2021 - 22ல், 4,000 கோடி ரூபாய் மின் கட்டண பாக்கியாக இருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 3,351 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த 2020 - 21ல், 1.45 லட்சம் கோடி ரூபாய், மின் வாரியத்துக்கு கடன் இருந்தது; 2021 - 2024ல், 1.90 லட்சம் கோடி ரூபாயாக கடன் தொகை அதிகரித்து உள்ளது.
மின் வாரியத்தில் இருந்து, ஒவ்வொரு அலுவலகத்துக்கும் பாக்கியை உடனே செலுத்த கடிதம் அனுப்பப்படுகிறது; ஆனாலும், வசூலிக்க முடியவில்லை. மின் கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி, பிற பிரிவுகள் போல், உடனே இணைப்பை துண்டிக்க முடியாது.
ஏனெனில் அரசு பணிகளிலும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பாக்கியை செலுத்த, அழுத்தம் மட்டும் கொடுக்கிறோம். இதை அவர்கள் சாதகமாக பயன்படுத்தி, குறிப்பிட்ட நாட்களுக்குள் தொகையை செலுத்துவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -