கடைகளை குறைத்து 'பார்'களை கூட்டும் தமிழக அரசு!: கிளப் என்ற பெயரில் லைசென்ஸ் கொடுத்து வசூல் வேட்டை
கடைகளை குறைத்து 'பார்'களை கூட்டும் தமிழக அரசு!: கிளப் என்ற பெயரில் லைசென்ஸ் கொடுத்து வசூல் வேட்டை
UPDATED : ஜன 13, 2024 11:24 AM
ADDED : ஜன 13, 2024 07:47 AM

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு போட்டியாக, 'எப்.எல்., 2' பார்களில் சரக்கு விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. வெளிநாட்டு மதுபானங்களை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசின் சார்பில் எப்.எல்., 1, 2,3 என பலவிதமான லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன.
இதில் எப்.எல்., 1 என்பது, டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு உரியது. எப்.எல்., 2 லைசென்ஸ், கிளப்களுக்கு வழங்கப்படுகிறது. ஹோட்டல்களுடன் இணைத்து 'பார்' நடத்துவதற்கு, எப்.எல்., 3 லைசென்ஸ் பெற வேண்டும்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில், 4800க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. 836 ஹோட்டல்களில் பார்களுக்கு எப்.எல்., 3 லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, எப்.எல்., 2 எனப்படும் கிளப் லைசென்ஸ்களை வாங்கி, டாஸ்மாக் பார்களுக்கு போட்டியாக, பார் நடத்தும் புதிய தொழில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் கோடிகளில் வருவாய் கொட்டியதால், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மட்டுமின்றி, மூன்றாம் நிலை நகரங்களிலும் அதிகளவில் துவக்கப்பட்டன.
கடந்த ஆட்சியில், தேனி நகரத்தை சேர்ந்த அ.தி.மு.க.,பிரமுகரும், இந்த ஆட்சியில் திருப்புவனத்தைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகரும் இந்த தொழிலில் கொட்டி கட்டி பறக்கின்றனர்.
இவர்கள் இருவர் மட்டும், 70 எப்.எல்., 2 பார்களை நடத்துகின்றனர். தற்போது தமிழகத்தில் மொத்தமாக 525க்கும் அதிகமான எப்.எல்., 2 பார்கள் இயங்கி வருகின்றன. போட்டி அதிகரித்துள்ளதால், பார் லைசென்ஸ் லஞ்சமும் பல மடங்கு அதிகமாகியுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், 25 - 50 லட்சம் ரூபாயாக இருந்தது. இப்போது இந்த தொகை, 35 - 75 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதற்காக பல விதிமீறல்கள் நடக்கின்றன.
இந்த பார்களில், டாஸ்மாக் விலையை விட, 25 - 30 சதவீதம் மட்டுமே, அதிக விலை வைத்து விற்கப்படுவதால், மதுக்கடைக்கு இணையாக இந்த பார்களுக்கு கூட்டம் வருகிறது.
மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டதாக மார் தட்டும் முதல்வருக்கு, கிளப்களின் பெயரில், எப்.எல்., 2 லைசென்ஸ் வாரி வழங்கப்படுவதும், அதற்கு ஏராளமாக லஞ்ச பணம் வசூலிக்கப்படுவதும் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நமது சிறப்பு நிருபர்