தமிழிசையா, வானதியா? தேசிய பொ.செ., பதவிக்கு போட்டி
தமிழிசையா, வானதியா? தேசிய பொ.செ., பதவிக்கு போட்டி
ADDED : செப் 28, 2024 03:37 AM

சென்னை: பா.ஜ., தேசிய பொதுச்செயலர் பதவியை பிடிக்க, முன்னாள் கவர்னர் தமிழிசை, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி ஆகியோர் ஆர்வம் காட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல், செப்., 1 முதல் நடந்து வருகிறது.
ஆர்வம்
இப்பணிகள் முடிந்ததும், அக்டோபர், நவம்பரில் கிளை கமிட்டி, மண்டல, மாவட்ட, மாநில தலைவர்கள், மாவட்ட, மாநில, தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும்.
வரும் டிசம்பர் இறுதியில், தேசிய தலைவர் தேர்தல் நடக்கும்.
புதிய தேசிய தலைவர் தேர்வானதும், தேசிய பொதுச்செயலர்கள், துணை தலைவர்கள், செயலர்கள், இளைஞரணி, மகளிரணி, எஸ்.சி., அணி போன்ற அணிகளின் தேசிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பா.ஜ., கட்சி பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எனவே, தேசிய நிர்வாகிகள் நியமனத்தில், அதிகமான பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கஉள்ளது.
தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. பா.ஜ., மகளிரணி தேசிய தலைவராக இருக்கும் வானதியின் பதவிக்காலமும் டிசம்பரில் முடிகிறது.
எனவே, இருவரும் தேசிய பொதுச்செயலர் பதவியை பிடிக்க ஆர்வம் காட்டி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலர்கள் அருண் சிங், சுனில் பன்சால் ஆகியோரிடம் தமிழிசையும், வானதியும் பேசி வருவதாக கூறப்படுகிறது.
வாய்ப்பு
பா.ஜ., தேசிய நிர்வாகிகளில், பொதுச்செயலர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர்நிலை கூட்டங்களில், தேசிய பொதுச்செயலர்கள் பங்கேற்பர். ஏதாவது ஒரு மாநிலத்திற்கு மேலிட பொறுப்பாளராகவும் நியமிக்கப்படுவர்.
தற்போது பெண்கள் யாரும் பொதுச்செயலர்களாக இல்லை. பொதுச்செயலராக இருந்த புரந்தேஸ்வரி, ஆந்திர மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாகிகள் நியமனத்தின்போது, பெண்கள் இருவருக்கு, குறிப்பாக தென் மாநிலங்களைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு பொதுச்செயலர் பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது.
கோவிந்தாச்சாரியாவுக்கு பின், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் பா.ஜ., தேசிய பொதுச்செயலராக இருந்ததில்லை.
எனவே, இந்த முறை தங்களுக்கு பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என்று தமிழிசையும். வானதியும் நம்புவதாகவும், அதற்காக தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இருவரில் ஒருவருக்கு தேசிய பொதுச்செயலர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பா.ஜ., வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.