ஆளுங்கட்சியினருக்கு கோவில் நிலம் தாரைவார்ப்பு; அதிகாரத்தை மீறி செயல்பட்டாரா அமைச்சர் கீதா ஜீவன்?
ஆளுங்கட்சியினருக்கு கோவில் நிலம் தாரைவார்ப்பு; அதிகாரத்தை மீறி செயல்பட்டாரா அமைச்சர் கீதா ஜீவன்?
ADDED : டிச 03, 2024 03:15 AM

துாத்துக்குடி: துாத்துக்குடியில் பிரபலமான சங்கரராமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக இருக்கும் 6.5 ஏக்கர் நிலத்தை, அமைச்சர் கீதா ஜீவன் சிபாரிசின்படி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவருக்கு சொற்ப தொகைக்கு குத்தகை வழங்கிய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படி வழங்கப்பட்ட நிலத்தின் குத்தகையை ரத்து செய்து, நிலத்தை மீட்டு கோவில் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என, கலெக்டரிடம் புகார் மனு அளித்திருக்கிறார் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன்.
அவர் கூறியதாவது:
துாத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல கிராமங்களிலும் உள்ளன.
துாத்துக்குடிக்கு அருகில் இருக்கும் மாப்பிள்ளையூரணி வருவாய் கிராமத்தில் 76 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், கோமஸ்புரம் பகுதியில் இருக்கும் 6.51 ஏக்கர் நிலத்தை, தன் உதவியாளர் மணி என்பவரிடம் வேலை பார்க்கும் பழனிசாமி என்பவருக்கு குறைந்த தொகைக்கு குத்தகைக்கு கொடுக்க, லோக்கல் அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.
உள்வாடகை
சங்கரராமேஸ்வரர் கோவில் பெயரில் உள்ள அந்த நிலத்துக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையின் செயல் அதிகாரியே காப்பாளராக உள்ளார்.
இப்படி குத்தகைக்கு எடுத்திருப்பவர், அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு உரியதாக ஆக்கி உள்ளார். அங்கே கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பல லட்சம் ரூபாய் வருமானத்துக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
பழனிசாமி குத்தகைக்கு எடுத்த இடத்தில் 1.5 ஏக்கர் நிலத்தை, ஆட்டுச் சந்தைக்காக தி.மு.க., துாத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருக்கும் அம்பா சங்கர் உள்வாடகைக்கு பெற்றுள்ளார். இதன் பின்னணியில் அரசியல் காய் நகர்த்தல்களும் உள்ளன.
லோக்கல் அமைச்சராகவும், மா.செ.,வாகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கட்டுப்பாட்டில் தான், துாத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகியான அம்பா சங்கர் இருந்து வருகிறார்.
அவருக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் சமீப காலமாக அரசியல் ரீதியில் ஒத்து வரவில்லை. இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகளை விமர்சித்து அம்பா சங்கர் சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், அம்பா சங்கரை தன் கோஷ்டிக்கு இழுத்து வந்தார். அதற்கு கைமாறாகவே, குறைந்த குத்தகை தொகைக்கு சங்கரராமேஸ்வரர் கோவில் நிலத்தை வழங்கச் செய்துள்ளார்.
இப்படி பெறப்பட்ட நிலப் பகுதிகளில் அமைக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் வாயிலாக, மேலும் பல தி.மு.க., பிரமுகர்கள் பலன் அடைந்துள்ளனர். காய்கறி கடை முதல், டீக்கடை வரை பலரும் கடை அமைத்துள்ளனர்.
விதிமீறல்
குறிப்பிட்ட அந்த இடத்தில் கடைகள் கட்டுவதற்கு முன்னதாகவே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரான தி.மு.க., ஒன்றிய செயலர் சரவணகுமார், 122 கடைகளுக்கு சொத்து வரி ரசீது வழங்கி உள்ளார்.
குத்தகை நிலத்தில், உள்ளூர் திட்டக் குழும விதிமுறையை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. விதிமீறலோடு கட்டப்பட்ட கடைகள் இடிக்கப்படுவதோடு, குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு, கோவில் நிலம் மீட்கப்பட வேண்டும்.
இந்த முறைகேடுக்கு, கோவில் அறங்காவலர் குழு, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் என அனைவரும் ஒத்துழைப்பாக இருந்து செயல்பட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் அமைச்சரே இருப்பதால், முதல்வரே நேரடியாக தலையிட்டு நிலத்தை மீட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், பிரச்னை பெரிதாவதை தொடர்ந்து, கோவில் நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்து விடலாமா என ஹிந்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் யோசித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.