கங்கை கரையோரம் 10 கி.மீ., துாரத்துக்கு தற்காலிக குடியிருப்புகள்
கங்கை கரையோரம் 10 கி.மீ., துாரத்துக்கு தற்காலிக குடியிருப்புகள்
ADDED : டிச 17, 2024 03:20 AM

மகா கும்பமேளாவையொட்டி, பிரயாக்ராஜில் கங்கை கரையோரம் 10 கி.மீ., துாரத்துக்கு, லட்சக்கணக்கான குடியிருப்புகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடக்கிறது. இது, உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாகும்.
43 கோடி பக்தர்கள்
கும்பமேளாவின் போது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட, உலகம் முழுதும் இருந்து பல லட்சம் பத்தர்கள் வருவர்.
இந்நிலையில், 2025 ஜன., 13 முதல் பிப்., 26 வரை பிரயாக்ராஜில் மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்காக, 43 கோடி பக்தர்கள் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை வரவேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை, உ.பி., அரசு மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகள் முழு வீச்சில் செய்து வருகின்றன.
மகா கும்பமேளா நடக்கும் பகுதிக்கு செல்லும் முக்கிய ரயில் வழித்தடமான, 'ஜுசி -- பிரயாக்ராஜ்' இடையே, ஏற்கனவே இருந்த 100 ஆண்டு பழைய பாலத்துக்கு மாற்றாக, 850 கோடி ரூபாயில், 1.9 கி.மீ., மின்மயமாக்கபட்ட இரு வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள பிரயாக்ராஜ், ஜூசி உள்ளிட்ட ஒன்பது ரயில் நிலையங்கள், பயணியருக்கான வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
அடுத்த ஆண்டு நடக்க உள்ள மகா கும்பமேளாவில், 43 கோடி பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ரயில்களில் மட்டுமே ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் வருவர் என கணக்கிடப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பயணியர் வசதிக்காக கூடுதல் கவுன்டர்கள், காத்திருப்பு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
தடுப்புகள்
இதேபோல, கங்கை கரையோரமாக, மாநில அரசு சார்பில், 10 கி.மீ., துாரத்துக்கு பல லட்சக்கணக்கான குடியிருப்புகள் பணி நடக்கிறது.
பக்தர்கள் வரிசையாக செல்ல, தற்காலிக பாதைகள் அமைக்கப்படுகின்றன. நெரிசல் ஏற்பட்டால், பக்தர்களை ஆங்காங்கே நிறுத்த தடுப்புகளும் அமைக்கப்படுகின்றன. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -