வடபழனி கோவில்: கெடு அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியம்
வடபழனி கோவில்: கெடு அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் அலட்சியம்
UPDATED : மார் 14, 2024 05:49 AM
ADDED : மார் 14, 2024 12:40 AM

வடபழனி ஆண்டவர் கோவில் முகப்பு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு போக்குவரத்து போலீசார் காலக்கெடு அளித்தும், எந்த பயனும் இல்லாமல் போனது. இதனால், பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
ஆற்காடு சாலையில் இருந்து கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகள் நடைபாதை மற்றும் சாலையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது.
மாமூல் வசூல்
திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் அச்சாலையே ஸ்தம்பித்து விடுகிறது. இந்நிலையில், வடபழனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் ஆண்டவர் தெருவில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளுக்கும், கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற காலக்கெடுவும் விதித்தனர். ஆனாலும், ஆக்கிரமிப்பாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கிறது.
வடபழனி ஆண்டவர் தெருவில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரிக்க காரணம், ஆளுங்கட்சி கவுன்சிலரின் ஆதரவாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தினசரியாகவும், மாதா மாதம் மாமூல் பெறுவது தான் என, வெளிப்படையாக கூறுகின்றனர்.
நடைபாதையில் கடை வைக்க ஒரு தொகை, சாலையின் இருபுறமும் உள்ள கடைகளுக்கு ஒரு தொகை என, ஆளும் கட்சி கவுன்சிலரின் ஆதரவாளர்கள், தினசரி ஆயிரக்கணக்கில் மாமூல் பார்த்து விடுகின்றனர். இதற்கு, மாநகராட்சி ஊழியர்கள் உடந்தையாக இருப்பதால், யார் வந்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற மனப்போக்குடன் ஆக்கிரமிப்பாளர்கள் நடக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதி கவுன்சிலர், தனக்கும் இந்த ஆக்கிரமிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி வருகிறார். அவரது ஆதரவாளர்களின் ஆசியுடன், ஆக்கிரமிப்பு எல்லை மீறிச் செல்கிறது என்பதை அவர் உணர வேண்டும். இதில், கவுன்சிலரின் தலையீடு இல்லாதபட்சத்தில், தன் வார்டுக்கு உட்பட்ட வடபழனி ஆண்டவர் கோவில் முகப்பில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
நிரந்தர வழி
வடபழனி ஆண்டவர் கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற காவல் துறை, போக்குவரத்து போலீசார், மாநகராட்சியினர், வார்டு கவுன்சிலர், கோவில் நிர்வாகம் என, அனைவரும் ஒருங்கிணைந்து முடிவு செய்ய வேண்டும்.
ஆற்காடு சாலையில் இருந்து ஆண்டவர் கோவில் முகப்பு வரை பாதசாரிகள், பக்தர்கள் நடைபாதையில் மட்டுமே நடக்க வேண்டும் என, உத்தரவிட வேண்டும். நடைபாதை சீரமைக்காததால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் பயணிப்பதும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு வகையில் வசதியாகிறது.
எனவே, நடைபாதையை உடனடியாக சீரமைக்க வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள் தொடர்ந்து, மாநகராட்சியின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில், போக்குவரத்து போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
-- நமது நிருபர் --

