பெரியாறு அணை கட்ட பயன்படுத்திய படகு பென்னிகுவிக் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது - அருங்காட்சியகம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
பெரியாறு அணை கட்ட பயன்படுத்திய படகு பென்னிகுவிக் மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது - அருங்காட்சியகம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 14, 2025 05:54 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை கட்டுமானப் பணியின்போது பென்னிகுவிக் பயன்படுத்திய இரும்பு படகு, லோயர்கேம்ப் மணிமண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பென்னிகுவிக் பயன்படுத்திய மேலும் சில பொருட்களைக் கொண்டு வந்து அருங்காட்சியம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. 1887ல் கட்டுமானப் பணி துவங்கியது. அடர்ந்த வனப்பகுதி, வனவிலங்குகள் தொந்தரவு, பாம்புகள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு இடையூறு, சிரமங்களுக்கு இடையே ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக் இப்பணிகளை மேற்கொண்டார். கட்டுமானப் பணிகள் முடிந்து 1895 அக்.,10ல் அணையில் முதன் முதலாக தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இத் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அணை கட்டி முடிக்கப்பட்டு 130 ஆண்டுகள் ஆனபோதிலும் இதுவரை கம்பீரமாக உள்ளது.
மணிமண்டபம்
அணையைக் கட்டிய பென்னிகுவிக்கை நினைவு கூரும் வகையில் லோயர்கேம்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2013 ஜன.,15ல் திறப்பு விழா காணப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் பென்னிகுவிக் பிறந்த நாளான ஜன.,15ஐ பொங்கல் விழாவாக மணிமண்டபத்தில் கொண்டாடி வருகின்றனர். 2019ல் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
இரும்புப் படகு
அணை கட்டுமானப் பணியின் போது சுண்ணாம்பு, ஜல்லிக்கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல இரும்பு படகு பயன்படுத்தப்பட்டது. இப்படகு அணைக்கு அருகில் நீர்த்தேக்கத்தை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்தது. துருப்பிடித்து அழியும் நிலையில் இருந்தது. இதனை லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்திற்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கூடுதல் எடையுள்ள இப்படகு நீர்வளத்துறை அதிகாரிகளால் மூன்று பாகங்களாக வெட்டி அங்கிருந்து லோயர்கேம்ப் கொண்டு வந்து மீண்டும் இணைத்து பெயிண்ட் பூசி மணிமண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருங்காட்சியகம்அமைக்கப்படுமா
பொ.கந்தசாமி, நாவலாசிரியர், ஆயர்தர்மம், விருதுநகர் மாவட்டம்
நான் எழுதிய 'நீர் விளக்கு பென்னிகுவிக்' என்ற நாவலை 2024 ஜன.,15ல் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு முன் வெளியிட்டேன். அந்த நுாலில் அணையின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு படகு வெயிலிலும், மழையிலும் காய்ந்து துருப்பிடித்து கேட்பாரற்று கிடப்பது குறித்து எழுதியுள்ளேன். வரலாற்றை நினைவு கூரும் வகையில் உள்ள படகை லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு கொண்டு வந்து காட்சிப்படுத்த வேண்டும் என கூறியிருந்தேன். தற்போது படகு கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைப்பகுதியில் கேட்பாரற்று கிடக்கும் பென்னிகுவிக் பயன்படுத்திய கலவை இயந்திரத்தையும் கொண்டு வந்து காட்சிப்படுத்த வேண்டும். தற்போது மணிமண்டபத்தில் பென்னிகுவிக் பயன்படுத்திய சாய்வு நாற்காலி, கட்டுமானப் பணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அணையின் மாதிரி தோற்றம் ஆகியவை உள்ளது.
இதனுடன் மேலும் சில பொருட்களைக் கொண்டு வந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். கட்டுமானப் பணியின் போது 426 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் விபரங்களையும் இங்கு பார்வைக்கு வைக்க வேண்டும். மணிமண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். என்றார்.