கவர்னர் - முதல்வர் இடையே மீண்டும் துவங்கியது மோதல்
கவர்னர் - முதல்வர் இடையே மீண்டும் துவங்கியது மோதல்
ADDED : ஜன 30, 2024 02:07 AM

சென்னை: கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே, கொள்கை ரீதியாக மோதல் இருந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு சட்டசபையில் உரையாற்ற, கவர்னரை அரசு அழைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையில், கவர்னர் அழைப்பில், அவரை முதல்வர் நேரில் சந்தித்து பேசினார். அதன்பின் சுமுக உறவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அதற்கேற்ப குடியரசு தினத்தன்று, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், நேற்று முன்தினம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வெண்மணி கிராமத்திற்கு சென்றார். அங்கு, 1968ம் ஆண்டு படுகொலையில் உயிர் பிழைத்த பழனிவேல் என்பவரை சந்தித்து பேசினார். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகர், பட்டியலின சமூகத்தினர் வசிக்கும் ஜீவா நகரை பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து தன் 'எக்ஸ்' பதிவில், 'கிராமங்கள் முழுதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான நிலையில், சகோதர - சகோதரிகள், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக, இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என, ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்' என கூறியுள்ளார்.
இது, ஆளுங்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை போர் துவங்கி உள்ளது. காந்தி நினைவு தினம் தொடர்பாக, நேற்று முன்தினம் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், 'தேசத் தந்தை காந்தி ஒற்றை மதவாத தேசியவாதத்தை ஏற்கவில்லை; அதனாலேயே மத வெறிக்கு பலியானார். அவர் மீதான கோபம் வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அவரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை. காந்தியால் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என கவர்னர் ரவி சொல்லி இருப்பது, வன்மம் கலந்த நோக்கத்துடன் தான்' என, கூறியிருந்தார்.
அதற்கு முந்தைய நாளே, 'காந்தி குறித்து நான் அவ்வாறு பேசவில்லை' என, கவர்னர் விளக்கம் அளித்திருந்தபோதும், முதல்வர் அதை சுட்டிக்காட்டியிருந்தார்.
இச்சூழலில், நேற்று கவர்னர் ரவி வெளியிட்டுள்ள பதிவு:
நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால், நாகப்பட்டினம் மாவட்டத்தில், தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனை பெற முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது.
பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால், கீழ்வெண்மணி கிராமத்தில், சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில், விலை உயர்ந்த கான்கிரீட் கட்டுமானம், ஒரு நினைவுச் சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி, தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விதிகளுக்கு உட்பட்டே
வீடுகள் ஒதுக்கீடு
தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன; எவ்வித குறைபாடும் இல்லை. திட்டங்கள் குறித்த விபரங்களை விரிவாக அளிக்க, அத்துறை தயாராக உள்ளது.
வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் விற்பனைக்கான வழிகாட்டி விதிகள் இருப்பது போன்று, ஏழைகளுக்கான திட்டங்களுக்கும் விதிகள் உள்ளன. இதற்கு உட்பட்டு தான் வீடுகள் ஒதுக்கப்படுகின்றன.
-முத்துசாமி, அமைச்சர், வீட்டு வசதி துறை