வேலையே தராத வேலைவாய்ப்பு துறை சம்பளமும், செலவும் மட்டும் மாதம் ரூ.1.52 கோடி
வேலையே தராத வேலைவாய்ப்பு துறை சம்பளமும், செலவும் மட்டும் மாதம் ரூ.1.52 கோடி
ADDED : அக் 26, 2025 11:57 PM

பணியாளர் தேர்வாணையம் வாயிலாக அரசு பணிக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவதால், யாருக்கும் வேலை தராத துறையாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை மாறி வருகிறது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஏற்பாடு செய்வது போன்ற பணிகள் மட்டுமே அத்துறையில் நடக்கும் நிலையில், மாதத்திற்கு 1.52 கோடி ரூபாய் அரசு நிதி வீணாக செலவிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 38 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தவிர, பொறியியல், மருத்துவம், பி.எல்., உட்பட தொழிற்படிப்புகளுக்கு பதிவு செய்ய, மதுரை மற்றும் சென்னையில் தனி வேலைவாய்ப்பு அலுவலகமும், மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்ய சென்னையில் அலுவலகமும் இயங்கி வருகிறது.
சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஆறு இடங்களில் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கு கீழ், ஐந்து முதல் ஆறு வரையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் உள்ளன.
அரசு பணி வேண்டுவோர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து வந்த நிலையில், முன்னுரிமை அடிப்படையில் கடிதம் அனுப்பி, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசு பணி கிடைத்து வந்தது.
காலப்போக்கில், அரசு பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், கூட்டுறவு பொது தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வாணையம், அரசு பஸ்களில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து, அதன் வாயிலாக அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
30 லட்சம் ரூபாய் அனைத்து அரசு பணிகளுக்கும் தேர்வாணையம் வாயிலாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது தேவையில்லாததாக கருதி, பலரும் பதிவு செய்வதை தவிர்க்கின்றனர்.
இதனால், பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன், 80 -- 90 லட்சமாக இருந்த பதிவுதாரர் எண்ணிக்கை, 30 லட்சமாக குறைந்து விட்டது. இதனால், வேலைவாய்ப்பு துறையில் பணிபுரியும் பலருக்கும் வேலை இல்லை.
ஆனால், இங்கு மண்டல இணை இயக்குநருக்கு மாதம் 2 லட்சம் ரூபாய், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலருக்கு 60,000 -- 70,000, உதவியாளருக்கு 40,000 - 50,000, தட்டச்சருக்கு 30,000 -- 35,000, சுருக்கெழுத்து தட்டச்சருக்கு 30,000 -- 35,000 ரூபாய் என சம்பளம் வழங்கப்படுகிறது.
தவிர, அலுவலக வாகனத்துக்கு, மாதத்துக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் எரிபொருள் என கணக்கிட்டாலும், ஆண்டுக்கு 1,800 லிட்டர் எரிபொருள் நிரப்பப்படும் பட்சத்தில், அதற்கு 1.80 லட்சம் ரூபாய் செலவாகிறது.
பயணப்படி ஆண்டுக்கு 2 -- 3 லட்சம் ரூபாய், உதவி வேலைவாய்ப்பு அலுவலருக்கு குறைந்தபட்சம் 1.50 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
கணினி பராமரிப்பு செலவு, மின் கட்டணம், தொலைபேசி, இணையதள கட்டணம் உட்பட இதர செலவுகள் என, ஆண்டுக்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
ஒரு மாவட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு, மாதத்துக்கு, ஊதியம் உட்பட இதர செலவுகளுக்கு என, குறைந்தபட்சமாக 4 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கும்போது, 38 மாவட்டங்களுக்கும் சேர்த்து, மாதத்துக்கு 1.52 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
வீணாகாமல் தடுக்கலாம் சென்னை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம், மதுரை, கோவை ஆகிய இடங்களில் துணை இயக்குநரும், சில இடங்களில் உதவி இயக்குநரும், சில மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களும் உள்ளனர்.
தற்போது பதிவுகளும் குறைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் மாதந்தோறும் வேலை வாய்ப்பு உதவித்தொகை, மற்றவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தற்போது முழுதுமாக தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், தொழில்நெறி வழிகாட்டும் பணிகளுக்கென உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்கள் தேவையா என சிந்திக்க வேண்டி உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட அளவில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது, தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது தான் முக்கிய பணியாக இருக்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போதிய பணி இல்லாத அதிகாரிகளையும், ஊழியர்களையும், தொழில்நெறி வழிகாட்டும் நடவடிக்கை மற்றும் திறன் பயிற்சி சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தலாம். இதன் வாயிலாக, அரசு நிதி வீணாகாமல் தடுக்கப்படும்.
- நமது நிருபர் -:

