sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மனதை மயக்கும் மன்னார் வளைகுடா தீவுகள்

/

மனதை மயக்கும் மன்னார் வளைகுடா தீவுகள்

மனதை மயக்கும் மன்னார் வளைகுடா தீவுகள்

மனதை மயக்கும் மன்னார் வளைகுடா தீவுகள்


ADDED : அக் 21, 2025 05:00 AM

Google News

ADDED : அக் 21, 2025 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உ லகின் வளம் மிக்க கடல் பகுதிகளில் மன்னார் வளைகுடா முக்கியமானது. தமிழகத்தின் தெற்கு கடலோர வளைகுடாவில் துவங்கி இலங்கையின் தலைமன்னார் பகுதி வரையில் விரிந்துள்ள கடற்பகுதிக்கு 'மன்னார் வளைகுடா' என்று பெயர். இந்திய அரசு 1989ல் துாத்துக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான 560 சதுர கி.மீ. மன்னார் வளைகுடா பரப்பை 'தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா' என்று அறிவித்தது. அழகான பவளப்பாறைகள், பல கடல் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இந்த உயிர்கோளக் காப்பகத்தில் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகையான கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் உள்ளன. குறிப்பாகப் பாலுாட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும், ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் காணப்படுகின்றன.

இந்தியக் கடல் பகுதியிலேயே 2000க்கும் அதிகமான மீன் வகைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் உள்ளன. முத்துக்கள் விளையும் சிப்பிகள், இறால் வகைகள், கடல் செவ்வந்தி, கிளிஞ்சல்கள் மற்றும் கடல்பசு போன்ற பல்லுயிர் வளம் மிகுந்து காணப்படுகிறது. மேலும் 280 வகை கடற் பஞ்சுகள், 92 வகை பவளங்கள், 22 வகை கடல் விசிறிகள், 160 வகை பலசுணைப்புழுக்கள், 35 வகை இறால்கள், 17 வகை நண்டுகள், 7 வகை கடற்பெரு நண்டுகள், 17 வகை தலைக்காலிகள் மற்றும் 103 வகை முட்தோலிகள் காணப்படுகின்றன.

மனதை மயக்கும் தீவுகள் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளராமநாதபுரம், துாத்துக்குடி கடற்கரைப் பகுதிகளில் வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புளுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு என 21 தீவுகள் சராசரியாக 0.25 எக்டேர் முதல் 129 எக்டேர் வரை அமைந்துள்ளன.

அழகிய பவளப்பாறைகள் மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி வளரும் பவளப்பாறைகள் கடல் அரிப்பை தடுத்து தீவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.117 வகையான பவளப்பாறைகள் 94.3 சதுர கி.மீ.,ல் விரிந்த ஒரு பெரிய பவளப்பாறை தொகுப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகமாக இருப்பதால் மீன்கள் உட்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் அதிகளவில் இங்கு வசிக்கின்றன.

இந்தியாவில் இருக்கும் 2200 துடுப்பு வகை மீன்களில், 510 மீன்கள் இங்கு இருக்கின்றன. மீன்கள் மட்டுமன்றி, 100 முட்தோலிகள், 147 கடற்பாசி வகைகள், 160 கடற்பறவை இனங்கள் மற்றும் ஏராளமான அரியவகை கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக இந்த பவளப்பாறைகள் உள்ளன.

துள்ளிகுதிக்கும் டால்பின்கள் தீவுகளை ஒட்டிய பகுதியில் காலை, மாலை நேரங்களில் டால்பின்கள் வரிசையாக கூட்டம் கூட்டமாக துள்ளிக் குதித்து விளையாடுகின்றன.மக்கள் வசிக்காத தீவுகளின் சங்கிலியைக் கொண்ட மன்னார் வளைகுடாவில், ஸ்டெனோ பிரீடனென்சிஸ், ஸ்டெனெல்லா அட்டெனுவாட்டா, ஸ்டெனெல்லா லாங்கிரோஸ்ட்ரிஸ் மற்றும் டெல்பினஸ் டெல்பிஸ் உள்ளிட்ட வகை டால்பின்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. பாம்பன், குருசடை தீவு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் டால்பின்கள் கூட்டமாக விளையாடுவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

குஷிபடுத்தும் குருசடைத்தீவு ராமேஸ்வரம் அருகே குந்துகால் பகுதியில் உள்ள குருசடை தீவில் கடல் வாழ் உயிரினங்கள் நிறைய உள்ளதால், இத்தீவுக்குள் உயிரியல் ஆய்வு கூடம் இருந்தது. இங்கு வனத்துறை அனுமதியுடன் உயிரியல் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் ஈடுபட்டதால் இதனை 'உயிரியியல் பூங்கா தீவு' என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த 2019 ல் குருசடை தீவுக்கு சுற்றுலா படகு சவாரி துவக்குவதற்காக ரூ. 30 லட்சம் செலவில் கண்ணாடி இழை படகுகள் வாங்கப்பட்டன.

இவற்றை நிறுத்த குந்துகால் கடற்கரையில் மரப்பலகையில் பாலம் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்காக குருசடை தீவுக்கு படகு சவாரியை வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தீவுகளில் பூவரசு, கொடுக்காப்புளி, ஆலமரம், அரச மரம் உள்ளிட்ட மரங்களும் ஒவ்வொரு தீவிலும் 2000 பனங்கொட்டைகளுக்கும் மேல் விதைப்பு செய்யப்பட்டு தற்போது பராமரிக்கப்படுவதால் பனை மரங்கள் வளர்ந்து வருகின்றன. இவை மன்னார் வளைகுடா தீவுகள் வனச்சரக பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளன.

தீவுகளை சுற்றுலா தலமாக்கலாம் குருசடை தீவை தவிர்த்து மற்ற தீவுகளில் மீனவர்கள் தங்கி வலைகளை உலர வைக்கவோ, தீவைச் சுற்றி மீன் பிடிக்கவோ வனத்துறை தடை விதித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இத்தீவுப் பகுதிக்கு மீனவர்கள் செல்லாத நிலையில் கடத்தல்காரர்கள் புகலிடமாக மாற்றி உள்ளனர். பாம்பன் அருகே உள்ள சிங்கிள் தீவு, முயல் தீவு, பூமறிச்சான் தீவு, முள்ளிமுனை தீவு, மரைக்காயர் தீவுப் பகுதியில் பாம்பன், மண்டபம், கீழக்கரை கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் கஞ்சா, போதை மாத்திரை, மஞ்சள், பீடி இலைகளை கடத்தி செல்லும் கடத்தல்காரர்கள் நடுக்கடலில் பாதுகாப்பு படை ரோந்து கப்பலை கண்டதும் இத்தீவுகளில் மீனவர்கள் போர்வையில் பாசாங்கு செய்து தற்காத்து கொள்கின்றனர்.

அரிய வகை மீன்களின் சொர்க்க பூமியாக விளங்கும் இத்தீவுகள் பாதுகாப்பை பலப்படுத்தி மத்திய, மாநில அரசுகளின் அனுதியுடன் பாதுகாப்பு அம்சங்களுடன் வனத்துறையினர் சுற்றுலா அம்சங்கள் நிறைந்த தீவுகளை சுற்றிபார்க்கும் வகையில் படகு போக்குவரத்து துவங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us