/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வேயர்களுக்கு சங்கடம் தந்த தீபாவளி
/
சர்வேயர்களுக்கு சங்கடம் தந்த தீபாவளி
ADDED : அக் 21, 2025 05:02 AM
மதுரை: 'சிறப்பு முகாம் மனுக்களுக்கு தீர்வு காண நெருக்கடியில் பணியாற்றியதால் குதுாகல தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை' என சர்வேயர்கள் சங்கடமாக உணர்ந்தனர்.
தமிழகத்தில் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்'எனும் சிறப்பு முகாம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடக்கிறது. இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்பட 15 துறைகள் தொடர்பான மனுக்களை பெறுகின்றனர். அவற்றுக்கு 60 நாட்களுக்குள் பதில் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் மனுக்களை வழங்குகின்றனர்.
இவற்றில் 90 சதவீதம் வருவாய்த்துறை மனுக்களே. இதிலும் பட்டா மாறுதல், வாரிசு மாற்றம் போன்ற சர்வே தொடர்பான மனுக்கள் 90 சதவீதம் உள்ளன. இம்மனுக்களிலும் பட்டா சப் டிவிஷன் செய்ய வேண்டியவையே 90 சதவீதம் உள்ளன. இதனால் சர்வே துறையினர் அதிக பணிச்சுமையில் தவிக்கின்றனர்.
குவியும் மனுக்கள் சாதாரண நாட்களிலும் தாலுகா அலுவலகங்களுக்கு வரும் மனுக்களிலும் பட்டா மனுக்கள்தான் அதிகம். அவற்றில் பட்டா பெயர் மாற்றத்திற்கு 15 நாட்கள், பட்டா சப் டிவிஷன் செய்யும் மனுக்கள் எனில் ஒரு மாதத்திலும் பதிலளிக்க வேண்டும். இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வரும் மனுக்களை 60 நாட்களுக்குள் முடித்தாக வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. இம்முகாம்களில் ஒருபிர்க்காவிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வருவதால் அவற்றை விரைந்து முடிக்க வழியின்றி தவிக்கின்றனர்.
பல முகாம்களில் மனுக்களை பதிவேற்றம் செய்வதற்கே முறையாக கணினி, இணையதள வசதி இல்லை. அடிக்கடி சர்வர் செயலிழந்து விடுகிறது. பதிவேற்றம் செய்ததை பிரின்ட் எடுக்கவும், ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கவும் செலவினங்களும் போதுமான அளவில் கிடைப்பதில்லை.
இதற்கிடையே பெற்ற மனுக்களை பரிசீலித்து களத்திற்கு சென்று ஆய்வு செய்யவும் அவகாசம் கிடையாது. ஏனெனில் சாதாரணமாக அலுவலகங்களில் பெறும் மனுக்களை ஒருவர் மாதம் 100 எண்ணிக்கையில் தீர்வு கண்டார் எனில், முகாம்களில் ஆயிரமாயிரம் மனுக்கள் வருகின்றன. அவற்றை தீர்வு காண்பதில் நாட்களும் போதாது. ஆட்களும் போதாது என்ற நிலைதான் உள்ளது.
குதுாகலமில்லா தீபாவளி அதேசமயம் மனுக்களுக்கான தீர்வு விவரம் கேட்டு உயரதிகாரிகள் நெருக்குதல்கள் கொடுக்கின்றனர். இதனால் சர்வேயர்கள் பலரும் கடும் மனஉளைச்சலில்தான் பணியாற்றுகின்றனர். அத்துடன் சர்வேயர்களின் மாத நாட்குறிப்புக்கு உயரதிகாரிகளின் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனை 'ஆன்லைன்' மூலம் சமர்ப்பித்தாலும், கையேடுகளை அதிகாரிகள் கேட்கின்றனர். இதற்கு ஒப்புதலளிக்க பல ஆயிரங்களை சர்வயேர்கள் 'செலவு' செய்தாக வேண்டிய நிலை உள்ளது.
இத்தனை நெருக்கடிகளிடையே முகாமில் பெற்ற மனுக்களுக்கு தீபாவளிக்குள் தீர்வு காண நெருக்கடி கொடுத்தனர். தினமும் மாலை 5:00 மணிக்கு மனுக்கள் முடித்த விவரங்களை ஆய்வு செய்கின்றனர். இதில் தீர்வு கண்டவை, நிலுவையில் உள்ளவை குறித்து கேட்டுள்ளனர். மனுக்கள் எண்ணிக்கைக்கேற்ப கால அவகாசம் இல்லாததால் குதுாகல தீபாவளியைக் குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை என நொந்தனர்.