என்னால் முடியும் என்ற எண்ணமே முதல் வெற்றி! 'தினமலர்' நடத்திய 'அச்சம் தவிர்' நிகழ்வில் விழிப்புணர்வு
என்னால் முடியும் என்ற எண்ணமே முதல் வெற்றி! 'தினமலர்' நடத்திய 'அச்சம் தவிர்' நிகழ்வில் விழிப்புணர்வு
ADDED : டிச 12, 2024 05:17 AM

கோவை : 'தினமலர்' நாளிதழ் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி சார்பில், 'அச்சம் தவிர்' என்ற தலைப்பில், பெண்கள் பாதுகாப்பு, மனநலம், உடல்நலம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் குறித்த, விழிப்புணர்வு கருத்தரங்கம், கிருஷ்ணம்மாள் கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன், கிருஷ்ணம்மாள் கல்லுாரி செயலர் யசோதா தேவி, 'தினமலர்' கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.
'தினமலர்' விற்பனை பிரிவு மேலாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
பாரதியார் பிறந்த தினத்தில், மகளிர் கல்லுாரியில் பெண்களுக்கான தினம் கொண்டாட முடிவெடுத்த 'தினமலர்' நாளிதழுக்கு பாராட்டுக்கள். பாரதி வாழ்ந்த காலத்தில் பெண்களின் நிலை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. அந்த சூழலிலும், பெண் கல்வி, பெண் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் அவர்.
கோவை மாநகரில், காவல் துறை சார்பில், முதலாவதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
கல்லுாரி மாணவிகள் வெளிப்படையாக, தங்களது பிரச்னைகளை தெரிவிக்கும் வகையில், 'போலீஸ் அக்கா' திட்டம் துவக்கி, இதுவரை, 700 பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
உடல் சார்ந்த பாதுகாப்பை, நாங்கள் வழங்குகிறோம். அறிவுசார் பாதுகாப்புக்கு கல்லுாரி காலங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். பாடபுத்தகங்களை தாண்டி, பிற புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை, கட்டாயம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கவிஞர் கவிதாசன் பேசியதாவது:
பாரதியாரின் 'எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும், என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, நம் எண்ணங்களும், செயல்பாடுகளும் இருக்க வேண்டும். தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமையும் இருக்கும் ஒருவரைத்தான், தகுதியுள்ள மனிதன் என கூறுகிறோம்.
என்னால் முடியும் என்ற எண்ணமே முதல் வெற்றி. வாசிப்பு என்பது நம் அனைவரிடமும் இருக்க வேண்டும். ஒரு வரிதான் முடியும் என்றால் ஆத்திச்சூடி படியுங்கள், இரண்டு வரிதான் முடியும் என்றால் திருக்குறள் படியுங்கள்.
உலகில் வென்றவர்கள், வீழ்ந்தவர்கள் இருவரும் வரலாற்றில் உள்ளனர். வேடிக்கை பார்த்தவர்களுக்கு வரலாற்றில் என்றுமே இடமில்லை. கல்வியே அனைவருக்குமான ஆயுதம், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
'மாணவ சமுதாயத்துடன் கரம் கோர்க்கும் தினமலர்'
'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார் பேசியதாவது:
கல்விக்கு 'தினமலர்' ஆற்றிவரும் பணி அளப்பறியது. சுட்டிக்குழந்தைகளுக்காக ஆண்டுதோறும், 'அரிச்சுவடி' என்னும் நிகழ்வு நடத்துகிறோம். படிக்கும் போது அறிவை மேம்படுத்த பள்ளி மாணவர்களுக்கு, 'வினாடி -வினா' போட்டி நடத்தி வருகிறோம். தேர்வுக்கு முன் 'ஜெயித்துக்காட்டுவோம்', தேர்வுக்கு பின், உயர்கல்வி 'வழிகாட்டி' என ஆண்டு முழுவதும் மாணவ சமுதாயத்துடன் கரம் கோர்த்து, பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, சர்வதேச மலைகள் தினத்தை முன்னிட்டு, நிழற்படம் வெளியிடப்பட்டது.
'சேமிப்பில் தெளிவு அவசியம்'
கருத்தரங்கில், ஹெச்.டி.எப்.சி., ஏ.ம்.சி., நிறுவன கிளஸ்டர் தலைவர் குருவிட்டல் பேசுகையில், ''இன்று, ஒரு 100 ரூபாய் சேமித்து அதை அடுத்தாண்டு எடுத்து பயன்படுத்தும் போது அதன் மதிப்பு, 94 ரூபாயாக குறைந்து இருக்கும். இதைத்தான் பணவீக்கம் என்கிறோம். தற்போது சேமிக்க பல ஆக்கப்பூர்வமான வழிகள் உள்ளன. குறிப்பாக, பங்குசந்தை போன்றவற்றில், சிறிய அளவிலான 'ரிஸ்க்' எடுப்பதில் தவறில்லை. கல்லுாரி மாணவிகள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட இதில் முதலீடு செய்யலாம்,'' என்றார்.
'இயற்கையை பாதுகாப்போம்'
கோவை வனமரபியல் மற்றும் வனமரப்பெருக்கு நிறுவன சீனியர் திட்ட அலுவலர் விக்னேஷ்வரன் பேசுகையில், ''இயற்கையை பாதுகாப்பதே, நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் முதலீடு. 2024ம் ஆண்டில் வெப்பம், மழை, புயல் என அனைத்தும் உச்சத்தை அடைந்துள்ளது. கூடுதலாக மழை பதிவாகும் சமயங்களில், உடனடியாக வறட்சியும் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் சார்ந்த வாழ்க்கை முறைக்கு நாம் மாறவேண்டியது அவசியம்,'' என்றார்.
'கேன்சர் தடுப்பூசி அவசியம்'
கே.எம்.சி.எச்., மகளிர் புற்றுநோயியல் மற்றும் ரோபோடிக் சிகிச்சை டாக்டர் அன்புகனி சுப்பையன் பேசுகையில், ''டீன் ஏஜ் பெண்களிடம் பரவலாக மாதவிடாய் பிரச்னை காணப்படுகிறது. சரியான நேரத்தில் உறக்கம், தண்ணீர் குடித்தல், சரியான டயட் முறை பின்பற்றினாலே தீர்வு காணலாம். இரவு அதிகபட்சம் 10:30 மணிக்குள் உறங்கிவிட வேண்டும்.
''அதிக தண்ணீர், பழங்கள், காய்கறி எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
'நோ' சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்'
கே.எம்.சி.எச்., மனநல மருத்துவ நிபுணர் ஸ்ரீநிதி நித்யானந்த் பேசுகையில், ''உடல் ரீதியான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவது போல், மனரீதியான பிரச்னைகளுக்கும் மருத்துவரை அணுக வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமே பல சிக்கல்களுக்கு காரணம்.
''ஆண்களை காட்டிலும், பெண்களுக்கு இப்பிரச்னை அதிகமாக இருக்கும். நம் மனநலம் சார்ந்து பிரச்னை வரும் எந்த ஒரு செயல், நபருக்கும் 'நோ' சொல்ல தயக்கம் தேவையில்லை. தினமும், 20 நிமிடமாவது உங்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடுங்கள்,'' என்றார்.