மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை ஒழிப்பதில் ஒதுங்கிய வனத்துறையினர்
மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை ஒழிப்பதில் ஒதுங்கிய வனத்துறையினர்
ADDED : அக் 15, 2024 12:04 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரந்து விரிந்து காணப்படும் மலைபிரதேசமான கல்வராயன்மலையில் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. சாராய வியாபாரிகளுக்கு கல்வராயன்மலை வசதியாக இருக்கிறது.
மலையில் போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு கண்டுபிடித்து சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் மலையில் சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் கட்டுபடுத்த முடியவில்லை. கரடு முரடான மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சும் இடத்தை கண்டறிந்து ஒழிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. முறையாக வழி தெரியாமல் சென்று மலையில் மாட்டிக் கொண்டால், மீண்டும் வழிதடத்தை கண்டுபிடித்து வருவது மிகவும் கடினமாகும்.
கல்வராயன்மலையின் பெரும்பகுதி வனத்துறையின் கட்டுபாட்டில் இருக்கிறது. தடை செய்யப்பட்ட (ரிசர்வ் பாரஸ்ட்) பகுதியில் மட்டுமே கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுகிறது. போலீசாரை விட மலையில் உள்ள அனைத்து இடங்கள் குறித்தும் வனத்துறை அலுவலர்களுக்கு அதிகளவில் அறிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பெரும் துயர சம்பவத்திற்கும் பிறகும் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்து போலீசார் ஒழிப்பது தொடர்பான செய்தி மற்றும் புகைப்படம் பத்திரிக்கையில் வெளிவரும் பட்சத்தில், அதற்கு போட்டியாக வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு சாராயம் காய்ச்சுவதை ஒழித்து அதனை வெளியிடுவதில் தீவிரம் காட்டினர்.
தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதை ஒழிப்பதில் வனத்துறையினர் முற்றிலும் ஒதுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சும் வியாபாரிகள், வனத்துறையினரை முறையாக கவனித்தால் மட்டுமே சாராயம் காய்ச்ச முடியும் என்றும் கூறப்படுகிறது. காவல் துறையினர் மட்டுமே தற்போது தடுப்பு நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.