சிறுமிகளை சீரழிக்கத்துணிந்த 'குத்தாட்ட போதகர்; தலைமறைவு ஆசாமியின் திரைமறைவு லீலைகள் அம்பலம்
சிறுமிகளை சீரழிக்கத்துணிந்த 'குத்தாட்ட போதகர்; தலைமறைவு ஆசாமியின் திரைமறைவு லீலைகள் அம்பலம்
ADDED : ஏப் 10, 2025 05:15 AM

கோவையில் கிறிஸ்தவ மதத்தின் பெயரால் சபை நடத்தி, கூட்டம் சேர்க்க குத்தாட்டம் போட்டு வந்த போதகர் ஜான் ஜெபராஜ், போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ளார். சபைக்கு வந்த பெண்கள், சிறுமிகளிடம் இவர் செய்த சேட்டைகள் குறித்து விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்நபரை கைது செய்ய மூன்று தனிப்படைகளை அமைத்திருக்கிறார் கோவை போலீஸ் கமிஷனர்.
வாழ்க்கையில் பல தியாகங்களை செய்து, அர்ப்பணிப்போடு பலர் இறைப்பணி செய்கின்றனர். கிறிஸ்தவம் மட்டுமின்றி இஸ்லாமியர் மற்றும் இந்துக்கள் என மூன்று மதத்தினரும் அறக்கட்டளைகள் வாயிலாக பல்வேறு சேவைகள் செய்கின்றனர்.
உண்மையான சேவை, இறைப்பணிகளை சிலர் செய்துகொண்டிருக்கும் நிலையில், ஒரு சிலர் தங்களின் பணத்தேவை, இச்சைகளை தீர்த்துக்கொள்ள இறைப்பணியை ஆயுதமாக்கிக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், இந்த 'குத்தாட்டம் போடும்' 'யூ டியூப்' போதகர் ஜான் ஜெபராஜ், 37. தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இஸ்லாமியராக பிறந்து அதே பகுதியில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ்., அரசு பள்ளியில் படித்த இவர், 'சதர்ன் ஏசியா பைபிள் கல்லுாரியில்' படித்து விட்டு போதகர் ஆனார்.
கோவை நகரில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு இங்கேயே வசித்து வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவை ஒய்.எம்.சி.ஏ.,வில் தனது முதல் ஜெபக்கூட்டத்தை நடத்தினார். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டதால், 'ஆன்லைனில்' ஆராதனை நிகழ்ச்சிகளை துவக்கினார். பின்னர் காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில், எட்வின் ரூசோ என்பவருக்கு சொந்தமான இடத்தில், 'கிங்ஸ் ஜெனரேஷன் சபை' என்ற பெயரில் சபை (சர்ச்) ஆரம்பித்தார். உறுப்பினர்களிடம் நிதி வசூலித்தார். இந்த சபையில் எட்வின் ரூசோவும் தன்னார்வலராக பணியாற்றினார்.
குத்தாட்ட ஸ்டைல்
வழக்கமாக கண்களை மூடி, கைகளை உயர்த்தி ஆறுதலான வார்த்தைகளை கூறி பிரசங்கம் வைக்கும் போதகர்கள் மத்தியில், மக்களை கவர்வதற்காக 'கீபோர்டு', டிரம்ஸ், கிடார், மைக், பாடல் என ஒரு இசைக்குழுவுடன் குத்தாட்டம் போட்டு போதிக்கும், ஒரு புதிய வழியை தனக்காக அமைத்துக்கொண்டார் இவர்.
ஜான் ஜெபராஜ் சமூக வலைதளத்தில் மிகவும் அறியப்படும் பிரபலமாக மாறினார். போதிக்க செல்லும் இடங்களுக்கு இசைக்குழுவினருடன் சென்று, சினிமா பாடல்களை மிஞ்சும் அளவிற்கு தனது பிரசங்கத்தை பாடல் வரிகளாக மாற்றி இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், ஆடி பாடி ஆராதனை நடத்தினார். இவர் யூ டியூப்பில் பதிவேற்றும் வீடியோக்களை லட்சம்பேர் பார்க்கத்துவங்கினர்; வருவாய் பெருகியது.
குறுகிய காலத்தில் பெரிய அளவில் வளர்ந்தார். கடவுள் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று, பாட்டுக்கச்சேரி போல் ஜெபக்கூட்டம் நடத்தினார்.
காஸ்ட்லி போதகர்
தனது நிகழ்ச்சியை காண வருவோரிடம். 'நான் ஒரு காஸ்ட்லி போதகர். அதனால் கணக்கு பார்க்காமல் அணிந்து இருக்கும் நகைகளை கழற்றி, காணிக்கையாக போடுங்கள்' எனக்கூறி நிதி திரட்டியுள்ளார். தனது ஜெபக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் மற்ற போதகர்கள் குறித்து அவதுாறாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். மதபோதகர்கள் மத்தியில் இருக்கும் போட்டியில், ஜான் ஜெபராஜ் மற்ற போதகர்களை, 'பூமர்', 'கொய்யா' என்றெல்லாம் விமர்சித்து வந்ததால், மூத்த போதகர்கள் பலரின் வெறுப்பை சம்பாதித்தார்.
சபையில் மலர்ந்த காதல்
திருமணமான இவருக்கு, ஜெப கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. விஷயம் வெளிவர, 'அசோசியேட் பாஸ்டராக' பணியாற்றி வந்த எட்வின் ரூசோ சபையில் இருந்து விலகினார். ஜான் ஜெபராஜூக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததால், அவர் சபை நடத்த சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த அக்., மாதம் ஜான் ஜெபராஜ், கிராஸ் கட் ரோடு அரசன் டவர்சில் இருந்து காலி செய்தார். ஜான் ஜெபராஜ், எட்வின் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தை போர் மூண்டது. ஜான் ஜெபராஜ் மீது கோவை போலீசிலும், எட்வின் மீது செங்கோட்டை போலீசிலும் புகார்கள் பதிவாகின.
இந்நிலையில், ஜெபக்கூட்டம் நடத்த புதிய சபை கட்ட ரூ. ஒரு கோடி தேவைப்படுவதாகவும், அதற்காக நிதி திரட்ட சென்னையில் மே 18ம் தேதி 'லைவ் இன் கான்சர்ட்' நடத்த திட்டமிட்டு, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து, டிக்கெட் விற்பனையையும் செய்துள்ளார்.
சிறுமிகளிடம் அத்துமீறல்
இந்நிலையில், ஜான் ஜெபராஜ் ஒரு சிறுமிக்கு முத்தமிடும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. 2024, மே 21ல், ஜான் ஜெபராஜின் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், 17 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமியர் பங்கேற்றுள்ளனர். ஜான் ஜெபராஜ் சிறுமியரிடம் பாலியில் ரீதியாக அத்துமீறியுள்ளார். 'வெளியில் சொல்லக்கூடாது' எனவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தையிடம் தெரிவித்தார்.
17 வயது சிறுமியுடன் சென்ற 14 வயது சிறுமியின் பெற்றோரும் இதை அறிந்தனர். இவ்விரண்டு சிறுமிகள் தைரியமாக வெளியில் சொன்னதால் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இன்னும் எத்தனை சிறுமியர், பெண்கள் போதகரால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில்தான் தெரியும்.
போலீஸ் நடவடிக்கை
சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து, கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார், ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த ஜான் தலைமறைவானார். கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளார். 'சிறுமியர் தான் நாளைய எதிர்காலம்' எனக்கூறி வேஷம் போட்டு வந்த போதகர் ஜான் ஜெபராஜின் உண்மை முகம், தற்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது.
வெளியில் கடவுள் போலவும், உள்ளே மிருக குணத்துடன் பணப்பசி மற்றும் பாலியல் பசியில் திரியும், இவர் போன்ற இன்னும் பலர் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இந்நபருக்கு போலீசார் அதிகபட்ச தண்டனையை பெற்றுத்தரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜான் ஜெபராஜின் சபையில் தன்னார்வலராக பணியாற்றிய எட்வின் கூறுகையில், ''ஆரம்பத்தில் நன்றாக தான் ஆராதனை செய்து வந்தார். மக்கள் பலருக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் பாடல்கள் பாடி கூட்டம் நடத்தினார். எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு தான் அவர் சபையை (சர்ச்) நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தன. சபைக்கு வருவோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர். சபைக்கு வரும் திருமணமான பெண்ணுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும், மேலும் பல பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் வந்தன.
இதனால், நான் சபையில் இருந்து விலகினேன். இதனிடையில், இவர் எங்கள் இடத்தில் சபை நடத்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இடத்தை காலி செய்து விடும்படி தெரிவித்தோம். கடந்த அக்., மாதம் இங்கிருந்து சென்றுவிட்டார். இதனால், என்மேல் உள்ள கோபத்தில் பொய் புகார்கள் அளித்தார். போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்தனர். பொய் என தெரிந்ததால் புகாரை நிராகரித்து விட்டனர்,'' என்றார்.
'வருத்தம் அளிக்கிறது'
கோவை பெந்தகோஸ்தே ஐக்கிய நிர்வாகி சாம்சன் எட்வர்டு கூறுகையில், ''இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்று ஒரு நிகழ்வு எப்போதும் நடக்க கூடாது. ஊழியம் செய்ய வருவோர், அர்ப்பணிப்போடு அதை செய்ய வேண்டும். வழி தவறி செல்வது மிகவும் தவறு. சபைக்கு செல்லும் மக்கள், விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்,'' என்றார்.
பெந்தகோஸ்தே சபை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பலர் அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் சூழலில் இது போன்று, இறைப்பணி என்ற பெயரில் தவறாக நடந்துகொள்ளும் ஒரு சிலரால் மொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருவராவது இது போன்ற சம்பவங்களில் சிக்கி விடுகின்றனர். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இது போன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என்றார்.
மதபோதகர் ஒருவர் கூறுகையில், 'எந்த மதமாக இருந்தாலும், அந்த மதத்தில் உள்ள பெரியவர்கள், மூத்தவர்கள் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். போதகர் என்ற பெயரில் புதிதாக வருவோரை கண்காணிக்க வேண்டும். இது போன்று எல்லைமீறும் நபர்களை களையெடுக்க வேண்டும்' என்றார்.
- - நமது சிறப்பு நிருபர் -