தி.மு.க., கொடியுடன் காங்., கொடி கிழித்தெறியப்பட்டதால் கதர் கட்சி அலறல்
தி.மு.க., கொடியுடன் காங்., கொடி கிழித்தெறியப்பட்டதால் கதர் கட்சி அலறல்
UPDATED : ஏப் 24, 2025 02:41 AM
ADDED : ஏப் 23, 2025 06:35 PM

கடந்த 19ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில் நடந்த அரசு விழாவில், கலைஞர் கைவினைத் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் பங்கேற்றார். அவரை வரவேற்கும்விதமாக, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், குன்றத்துார் சாலை நடுவில் காங்கிரஸ் கொடிகளை பறக்க விட்டிருந்தனர்.
அதே சாலையில், முதல்வர் ஸ்டாலினை வரவேற்கும்விதமாக, தி.மு.க., கொடி கம்பங்களை நட்டு, கொடி பறக்கவிட்டிருந்தனர். அவற்றின் அருகில் காங்கிரஸ் கொடிகள் பறக்க விட்டதை, தி.மு.க.,வினர் விரும்பவில்லை.
ஒருகட்டத்தில், சாலையில் வரிசையாக நடப்பட்டு இருந்த காங்கிரஸ் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு வீசியெறியப்பட்டன.
இந்த சம்பவம், காங்கிரசாரை கொந்தளிக்க வைத்தது. 'ராஜிவ் ரத்தம் சிந்திய புண்ணிய பூமியில், காங்கிரஸ் கொடியை அவமதித்தது நியாயம் தானா' என, சமூக வலைதளங்களில் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.
அதன் விபரம்:
* நெஞ்சம் பொறுத்திடுமோ, நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தமான காங்கிரஸ் கட்சிக்கு நிகழ்ந்த கொடுமை. அஞ்சிடுமோ, அழியாத வரலாற்றுக்கு சொந்தமான காங்கிரஸ் கட்சியின் தியாகம்
* அடிமை இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றிய கட்சி, இன்று யாருக்கு அடிமை; எதற்கு அடிமை என்றே தெரியவில்லை
* 'தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்து இருக்கிறது' என, ராகுல் இதயத்தில் உதிர்ந்த உணர்வு அலைகளுடன் பதிவிடுகிறோம். 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'
* தான் வாழ கட்சியை கெடுக்காதே என்ற உணர்வோடு, விரைவில் உதிக்கும் அறப்போர், அது உண்மையான தொண்டர்களின் உரிமைப் போர்.
இவ்வாறு பலரும் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து, காங்கிரசார் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், காங்கிரஸ் கொடி அவமானப்படுத்தப்பட்டது. இந்த விபரம், காங்., கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஆனால், இதற்கு இதுவரை எந்தத் தலைவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இனியும் இந்த விஷயத்தில் தாமதம் கூடாது. உடனே, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, தவறு செய்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தி.மு.க., கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரசுக்கு, இந்த நிலை என்றால், கூட்டணி தர்மம் எங்கே உள்ளது? இதே நிலை நீடித்தால், தொண்டர்கள் ஒன்றுபட்டு தேர்தல் பணி செய்ய வாய்ப்பில்லை.
இது ஆளும்கட்சிக்கும் கூட்டணிக்கும் பின்னடைவை தான் ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -