அரசு பள்ளிகளில் வீணாகும் 'டிவி'கள்; காட்சி பொருட்களாக மாறும் அவலம்
அரசு பள்ளிகளில் வீணாகும் 'டிவி'கள்; காட்சி பொருட்களாக மாறும் அவலம்
UPDATED : பிப் 05, 2025 04:54 AM
ADDED : பிப் 05, 2025 01:04 AM

மதுரை: தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் உள்ள, 'ஸ்மார்ட் டிவி'களுக்கு போதிய இணைய வசதி கிடைக்காததால், காட்சி பொருளாக மாறி வருகின்றன.
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு தற்போது தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதற்காக மேம்படுத்தப்பட்ட கற்பித்தல் பணி, வகுப்பறை சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும் பின், 'கியூ.ஆர்.,' கோடு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பாடம் சார்ந்த வீடியோ காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பாடம் முடிந்த பின், அதை மாணவர்களுக்கு காண்பிப்பதன் வாயிலாக, கற்றலில் ஆர்வம் அதிகரிக்கிறது. இதற்காக, மாநிலம் முழுதும் தலா, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில், 21,000க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகளில், 'ஸ்மார்ட் டிவி' வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆர்வமாகவும், எளிமையாகவும் கற்க வேண்டும் என்பதற்காக கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாட வாரியான சிறப்பு செயலிகளையும் ஆசிரியர்கள் உருவாக்கி, 'ஸ்மார்ட் டிவி' வழியாக கற்பிக்கின்றனர்.
இணையவசதி சரியாக கிடைக்காததால், 'ஸ்மார்ட் டிவி' வழி கற்பித்தல் சவாலாக மாறியுள்ளது. அந்த, 'டிவி'கள் காட்சிப் பொருளாகவே உள்ளன.
ஆசிரியர்கள் கூறியதாவது: அனைத்து பள்ளிகளிலும், பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாதம் 1,500 ரூபாய் வரை கட்டணம் செலுத்துகிறோம். ஆனாலும், சீரான இணையவசதி கிடைப்பதில்லை. மாற்று இணைய சேவை ஏற்படுத்த அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.
'ஸ்மார்ட் டிவி' வழியாக ஆர்வத்துடன் மாணவர்கள் கற்றாலும், நெட்ஒர்க் பிரச்னையால் அடிக்கடி பாதிப்பது பெரும் இடையூறை ஏற்படுத்துகிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.