இரண்டே ஆண்டில் பிரமாண்டமாய் உருவான பாரத சபை செங்கோல் முன் விழுந்து வணங்கிய பிரதமர் சர்வ மத பிரார்த்தனைகளுடன் புதிய பார்லி., திறப்பு
இரண்டே ஆண்டில் பிரமாண்டமாய் உருவான பாரத சபை செங்கோல் முன் விழுந்து வணங்கிய பிரதமர் சர்வ மத பிரார்த்தனைகளுடன் புதிய பார்லி., திறப்பு
ADDED : மே 29, 2023 12:31 AM
தேவாரம், திருவாசக பாடல்கள் பாடப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, ஹிந்து சம்பிரதாயப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாது, சர்வ மத பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர், இரவு பகல் பாராது, இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட உழைப்பின் உச்சகட்டமாக, நேற்று புதுடில்லியில் புதிய பார்லி., கட்டடத்தின் திறப்பு விழா திட்டமிட்டபடி விமரிசையாக நடந்தேறியது.அந்த பகுதி முழுதுமே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், பூஜை மற்றும் திறப்பு விழா என, இரண்டு கட்டங்களாக நிகழ்ச்சிகள் நடந்தன.

அதன்படி காலை 7:15 மணிக்கு, பட்டு வேட்டி - சட்டை, அங்கவஸ்திரம் அணிந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேராக காந்தி சிலைக்கு மலர் துாவி மரியாதை செய்தார். பின், அருகே அமைக்கப்பட்டிருந்த அழகிய பந்தலுக்குச் சென்று பூஜையில் பங்கேற்றார்.அங்கு, ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளின்படி, சிருங்கேரி மடத்தின் சார்பில் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன.
அருகே நிறுத்தப்பட்டிருந்த செங்கோல் முன்னிலையில், வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனங்கள் அனைவரும் கோளறு பதிகப் பாடலோடு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் மறைப் பாடல்களையும் பாடி, செங்கோலுக்கு மலர் துாவினர்.
முற்றிலும் ஹிந்து சம்பிரதாயப்படி, ஒரு மணி நேரத்திற்கு நடைபெற்ற இந்த பூஜை நிகழ்ச்சிக்குப் பின், அனைத்து மதப் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. முடிவாக, பிரதமர் நரேந்திர மோடி, செங்கோல் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.இதையடுத்து, அவரிடம் செங்கோலை எடுத்து, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார். மற்ற ஆதீனங்களும், பிரதமருக்கு ஆசீர்வாதம் செய்தனர்.

பின், ஆதீனங்கள், ஓதுவார்கள் புடைசூழ, கையில் செங்கோலைப்பிடித்தபடி அங்கிருந்து அருகிலுள்ள புதிய பார்லி.,க்குள் பிரதமர் சென்றவுடன், அங்கு, தமிழக பாரம்பரிய முறைப்படி தவில், நாதஸ்வர இசையோடு மேளதாளத்துடன் வரவேற்பு தரப்பட்டது.ஆதீனங்கள் கீழேயே நின்று கொள்ள, படி ஏறிச் சென்று, அங்குள்ள மேடையில் சபாநாயகர் இருக்கைக்கு வலது புறம் அருகே, இதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருந்த உயரமான கண்ணாடி பேழையில், செங்கோலைபிரதமர் நிறுவினார்.
குத்துவிளக்கு ஏற்றி வைத்து, செங்கோலுக்கு மலர் துாவி மரியாதை செய்து பயபக்தியோடு வணங்கினார். பின், கல்வெட்டுகளை திறந்து வைத்ததும் முதற்கட்ட நிகழ்ச்சி முடிந்தது.இரண்டாம் கட்ட நிகழ்ச்சியாக, 11:30 மணிக்கு பழைய பார்லி., கட்டடத்திற்குள் வந்து, வீரசாவர்க்கர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தி, புதிய பார்லி., கட்டடத்தின் லோக்சபாவுக்குள் பிரதமர் வந்து சேர்ந்தார்.

பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், கலைஞர்கள், வெளிநாட்டு துாதர்கள் என, ஆயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருந்தனர்.பிரதமர் நடந்து வர வர, அவரை ஆரவாரமாக வரவேற்கும் விதமாக மத்திய அமைச்சர்கள், பா.ஜ., - எம்.பி.,க்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும் கைகளை தட்டி, 'மோடி... மோடி...' என்றும், 'ஹரஹர மஹாதேவ்' என்றும், உரத்த கோஷங்களை எழுப்பினர்.
மேடையில் மூன்று இருக்கைகள் போடப்பட்டிருக்க, அவற்றில் பிரதமருக்கு அருகே இரு புறமும், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோர் அமர்ந்தனர்.நிகழ்ச்சி துவங்கியதும், வரவேற்புரையை ஹரிவன்ஷ் நாராயண் சிங் நிகழ்த்தினார், பின், அங்கிருக்கும் பிரமாண்ட திரைகளில் இரண்டு குறும்படங்கள் காட்டப்பட்டன.
இது முடிந்ததும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் அனுப்பியிருந்த வாழ்த்துரையை வாசித்த ஹரிவன்ஷ் சிங், அடுத்ததாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுப்பியிருந்த வாழ்த்துரையையும் வாசித்தார்.பின், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்துரை வழங்கினார்.
- நமது டில்லி நிருபர் -
'செங்கோல் நிறுவப்படுவது பெருமைக்குரிய விஷயம்'
தற்போது பார்லிமென்டில் நிறுவப்பட்டுள்ள செங்கோல், இதற்கு முன், பல ஆண்டுகளாக உ.பி.,யில் உள்ள அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அருங்காட்சியக அதிகாரிகள் கூறியதாவது:
அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 'செங்கோல்' புதிய பார்லி.,யில் நிறுவப்பட்டது, எங்களுக்கு மட்டுமல்லாமல், பிரயாக்ராஜ் மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயம். நல்ல விஷயத்திற்காக செங்கோல் பயன்படுத்தப்பட்டது, ஓர் உணர்ச்சிகரமான தருணம். செங்கோல் குறித்து அறிய மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், அருங்காட்சியகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அருங்காட்சியகத்தில் செங்கோலின் மாதிரி நிறுவப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ராஜ்யசபாவுக்கு 'தாமரை' லோக்சபாவுக்கு 'மயில்'
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, 900 கைவினை கலைஞர்களால் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளங்கள், புதிய பார்லிமென்டை அலங்கரிக்க உள்ளன. தேசிய பறவையான மயில் உருவம்நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளம், லோக்சபாவுக்கும்; தேசிய மலரான தாமரை உருவம் நெய்யப்பட்ட தரை விரிப்பு கம்பளம், ராஜ்யசபாவுக்கும் வழங்கப்பட்டன.
இவற்றை, 100 ஆண்டுகள் பழமையான பிரபல, 'ஓபீடீ கார்பெட்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் பணியில், உ.பி.,யின் பதோஹி மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்கள் ஈடுபட்டனர். தரை விரிப்புகளை தனித்தனியாக வடிவமைத்து, அவற்றைநெசவாளர்கள் ஒன்றாக இணைத்துள்ளனர்.
கவுரவம்
புதிய பார்லி., கட்டடத்தின் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டுப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை, பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், அவர்களுக்கு பாரம்பரிய சால்வைகளை வழங்கிய பிரதமர் மோடி, நினைவுப்பரிசுகளையும் அளித்து கவுரவப்படுத்தினார்.
வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்படும்
புதிய பார்லி., கட்டட திறப்பு விழா, நாட்டின் வரலாற்றில் பொன்னான வார்த்தைகளால் எழுதப்படும். இது, நாட்டு மக்களுக்கு பெருமை அளிக்கிறது. இந்த புதிய கட்டடம், நம் ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.
திரவுபதி முர்மு
ஜனாதிபதி
நாட்டின் வளர்ச்சிக்குசாட்சியாக இருக்கும்
சுயசார்பு இந்தியாவை உருவாக்குவது முதல், மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது வரை, வரும் ஆண்டுகளில் பல வரலாற்று தருணங்களின் அத்தியாயத்தை, இந்த புகழ்பெற்ற கட்டடம் எழுதும்.
ஜக்தீப் தன்கர்
துணை ஜனாதிபதி, ராஜ்யசபா தலைவர்
தன் அர்ப்பணிப்பை மோடி உறுதி செய்துள்ளார்
இந்த கட்டடமானது, புதிய யோசனைகளுக்கான உத்வேகத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஜனநாயகத்தின் பிறப்பிடமே, இந்தியா தான். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவியதன் வாயிலாக, பாரபட்சமற்ற தலைமையை நோக்கிய தன் அர்ப்பணிப்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்.
ஓம் பிர்லா
லோக்சபா சபாநாயகர்
இந்திய மக்களின்நம்பிக்கைக்கான சின்னம்
நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான, ஒரு வரலாற்று சின்னமாக புதிய பார்லி., இருக்கும். உலகிற்கு இந்தியா தலைமை தாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஹரிவன்ஷ்
ராஜ்யசபா துணைத் தலைவர்
திறப்பு விழாவா...முடிசூட்டு விழாவா?
பார்லிமென்ட் என்பது மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடியது. ஆனால், அதன் திறப்பு விழாவை முடி சூட்டு விழா போல் பிரதமர் மோடி கருதுகிறார்.
ராகுல்
முன்னாள் தலைவர்,
காங்கிரஸ்
அடையாளங்களுக்கு ஆதரவு தர வேண்டும்
இந்தியாவில் இப்போது இறையாண்மைக்கு உட்பட்ட மக்களாட்சி தான் நடக்கிறது. எனவே, நிகழ்காலத்தின் மதிப்பீடுகளை உறுதி செய்ய, செங்கோல் போன்ற கடந்த காலத்தின் அடையாளங்களுக்கு ஆதரவு தருவதே சிறந்தது.
சசி தரூர்
லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

