UPDATED : அக் 12, 2024 04:23 AM
ADDED : அக் 11, 2024 10:25 PM

ஆனைமலை : ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு தீர்வு காண்பது, அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே பல ஆண்டுகாலமாக உள்ளது. இதற்குரிய தீர்வு காண அரசு முன்வராதது வேதனை அளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
ஆழியாறு ஆற்று நீரை பயன்படுத்தி, ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி நகராட்சி, வழியோர கிராமங்களை உள்ளடக்கிய குடிநீர் திட்டம், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு உள்ளிட்ட 64 கிராமங்கள், பெரிய நெகமம், கிணத்துக்கடவு பேரூராட்சி பயன்பெறும் வகையில், 13 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் வாயிலாக, பொள்ளாச்சி நகரம், தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்துார் உள்ளிட்ட பகுதி மக்கள், குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
பல லட்சம் மக்கள் மட்டுமின்றி, கால்நடைகளுக்கு நீராதாரமாக உள்ளது இந்த ஆழியாறு ஆறு.இந்த ஆறு பல்வேறு காரணங்களினால் மாசுபடுகிறது. இதனால், ஆறு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
ஆட்சிகள் மட்டுமே மாறி, மாறி வருகின்றன; ஆனால், காட்சிகள் மாறவில்லை. ஆற்றில் கழிவுநீர் பிரச்னைக்கு ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு ஆற்றில் ஒன்பது இடங்களில், நேரடியாக கழிவு நீர் கலந்து தண்ணீர் முழுமையாக மாசுபட்டுள்ளது. மேலும், நீரில் கழிவுகளையும் வீசுவதால், ஆழியாறு நீரின் சுவை தற்போது கிடைப்பதில்லை.
ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது; அதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டம், அதிகாரிகள், அமைச்சரிடம் மனு கொடுத்து வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.
அதிகாரிகள் வரும் போது, சுத்திகரிப்பு நிலையம் அமைக்ககருத்துரு தயாரிப்பது அதை அரசுக்கு பரிந்துரை செய்வது என்ற அளவில் மட்டுமே உள்ளது. ஆனால், நிரந்தர தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளாக இல்லாமல், அதற்குரிய தீர்வு காணப்பட வேண்டும். இனியாவது அரசு ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நீட்டிக்க வேண்டும்
ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகள் சார்பில், நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதியுடன், ஆகாயத்தாமரை அகற்றப்பட்டது. மேலும்,தொடர் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அதில், ஆற்றில் மீதம் இருந்த ஆகாயத்தாமரைகளும் அடித்துச் செல்லப்பட்டன. எனினும், கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே, ஆற்றில் ஆகாயத்தாமரை செடி வளர்வதை தடுக்க முடியும்.