'டிஜிட்டல்' வடிவில் மாறிய நில வரைபடங்களை இணையதளத்தில் பார்ப்பதில் தொடருது பிரச்னை
'டிஜிட்டல்' வடிவில் மாறிய நில வரைபடங்களை இணையதளத்தில் பார்ப்பதில் தொடருது பிரச்னை
UPDATED : நவ 15, 2024 04:46 AM
ADDED : நவ 14, 2024 10:15 PM

சென்னை: நில வரைபடங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றும் பணிகள், 100 சதவீதம் முடிந்தாலும், இவற்றை பொது மக்கள் இணையதளம் வாயிலாக பார்ப்பதில் பிரச்னைகள் தொடர்கின்றன.
தமிழகத்தில், நிலம் தொடர்பாக வருவாய் துறை பராமரிக்கும் பட்டா, நில வரைபடம், அடங்கல் உள்ளிட்ட ஆவணங்கள், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன், வருவாய் துறை இப்பணியை செய்துள்ளது.
இதன்படி, 2000ம் ஆண்டில் இருந்து உருவான ஆவணங்கள் மட்டுமல்லாது, அனைத்து ஆவணங்களையும் அதாவது, பட்டா மற்றும் அதனுடன் இணைந்த நில அளவை வரைபடங்களை, இணையதளம் வாயிலாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதில், பெரும்பாலான மாவட்டங்களில் ஊரக பகுதிகளில், 'சர்வே' எண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்தால், அதன் பட்டா, 'அ' பதிவேடு விபரங்கள் கிடைக்கின்றன. ஆனால், நில வரைபடங்கள் கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்தது.
அதனால், ஒவ்வொரு சர்வே எண், அதன் உட்பிரிவுக்கு சம்பந்தப்பட்ட நில அளவை வரைபடங்களை, பொது மக்கள் இணையதளம் வாயிலாக பார்க்கும் வசதி, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. குறிப்பாக, நத்தம் நிலங்களின் வரைபடங்களையும், இதில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 55.20 லட்சம் சர்வே எண்களுக்கான நில வரைபடங்கள், டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளன; இப்பணிகள், 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அத்துடன், 16,669 கிராமங்களின் வரைபடங்களும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இவற்றை காகித பிரதிகளாக வழங்க கேட்டு, அரசு அலுவலகங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம். இணையதளம் வாயிலாகவே, இந்த ஆவணங்களை பெறலாம்.
நகர்ப்புற பகுதிகளில், நகர நில அளவை முடிந்த, 185 நகரங்களில் நில அளவை வரைபடங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இவற்றையும் பொது மக்கள் இணையதளம் வாயிலாக பார்க்க, பிரதி எடுக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வருவாய் துறையின் இ - சேவைகள் இணையதளத்தில், பட்டா விபரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதனுடன் சம்பந்தப்பட்ட நில வரைபடங்கள் மட்டும் கிடைப்பதில்லை. தொழில்நுட்ப பிரச்னை இருப்பதாக தகவல் வருகிறது.
உதாரணமாக, ஒரு சர்வே எண்ணில், 10 உட்பிரிவுகளுக்கு தனித்தனி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து உட்பிரிவுகளுக்கான வரைபடங்கள் கிடைக்கின்றன. எஞ்சிய உட்பிரிவுகளுக்கு நில வரைபடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்தாலும், கணினி திரையில் பார்ப்பதிலும், பிரதி எடுப்பதில் பிரச்னை தொடர்கிறது. வருவாய் துறை அதிகாரிகள் இதை விரைந்து சரி செய்தால், மக்களுக்கு, 100 சதவீத பயன் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.