போதை பொருள் விற்பனை அமோகம்; பள்ளி மாணவர்கள் அடிமையாகும் அவலம்
போதை பொருள் விற்பனை அமோகம்; பள்ளி மாணவர்கள் அடிமையாகும் அவலம்
UPDATED : பிப் 22, 2024 05:57 AM
ADDED : பிப் 22, 2024 01:19 AM

தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்தவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டு
ஆனால் இன்று வரை போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் முதல் பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவர்கள் இவ்வகை போதைப்பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது.
இதற்கு காரணம் பள்ளி அருகே மற்றும் சாலையோர வணிக நிறுவனங்களில் போதைப்பாக்குகள் விற்பனையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளும் அடிமையாவது என்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மருந்தகங்களில் நிகோடின் என்ற சிவிங்கம் மாத்திரை மருத்துவரின் அனுமதிச் சீட்டு இல்லாமல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, மாவட்ட நிர்வாகம் போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டூ- - -வீலர் சாகசம்
கும்மிடிப்பூண்டி பகுதியில், சாலை போக்குவரத்து விதிகளை மீறி, 18 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் டூ - -வீலர் ஓட்டுவது அதிகரித்து வருகிறது.
பள்ளி நேரங்களில், ஏராளமான பள்ளி மாணவர்கள், டூ - -வீலர்களில் பள்ளிக்கு வந்து செல்வதும், பெற்றோரை பின்னால் அமர வைத்து மாணவ - மாணவியர் டூ -- வீலர்களை ஓட்டிச் செல்வதும் அதிக அளவில் காணப்படுகிறது.
ஒரு சில பள்ளி மாணவர்கள், ஒரு படி மேலே சென்று, பள்ளி மாணவியர் முன் டூ- - வீலர் சாகசம் செய்வது, போக்குவரத்து விதிமீறல்களின் உச்சமாகும்.
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவியர் நடந்தும், சைக்கிள்களிலும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
அந்த சாலையில், அவர்கள் முன் மற்ற பள்ளி மாணவர்கள் டூ- - வீலர்களில் சாகசம் செய்வது மட்டுமின்றி, மாணவியரை மிரள வைக்கும் விதமாக செல்வதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது.
பள்ளி மாணவர்கள் சாகசம் செய்யும் ரெட்டம்பேடு சாலையில்தான் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம், டி.எஸ்.பி., முகாம் அலுவலகம், போக்குவரத்து போலீஸ் நிலையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் சாலை போக்குவரத்து விதிகள் மீறி டூ- - வீலர்கள் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அவர்கள் பயிலும் பள்ளிக்கு நேரடியாக சென்று, சாலை விதிகள் மீறல்களால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தண்டனைகள் குறித்து விளக்கி கூற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -