விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்; தர்மபுரியோடு நின்று போனது திட்டம்
விண்ணப்பித்த அன்றே பயிர் கடன்; தர்மபுரியோடு நின்று போனது திட்டம்
ADDED : நவ 04, 2025 04:48 AM

சென்னை : தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்தே அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டம், தர்மபுரி மாவட்டத்தில் துவக்கப்பட்டு இரு மாதங்களாகியும், தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன், நகை கடன் உட்பட, பல பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் கேட்டு, விண்ணப்பம் செய்தால் தாமதம் செய்யப்படுகிறது.
இதனால், குறித்த காலத்தில் கடன் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சங்கங்களில் பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தும் திட்டத்தை, கூட்டுறவு துறை துவக்கியுள்ளது.
முதல் கட்டமாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் துவக்கி வைத்தார்.
இத்திட்டம், அடுத்த மாதத்தில் இருந்து மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரு மாதங்களாகியும், தமிழகம் முழுதும் திட்டத்தை விரிவுபடுத்தாமல் இருப்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தான் வேளாண் சாகுபடி அதிகம் நடக்கிறது; அம்மாவட்டங்களில் தான் பயிர் கடனும் அதிகம் வாங்கப் படுகிறது.
இன்னும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில், விண்ணப்பித்த நாளிலேயே பயிர் கடன் வழங்கும் திட்டம் அமலுக்கு வரவில்லை; இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, ஆவணங்களை எளிய முறையில் பதிவேற்ற வேண்டும் என்பதற்காக, புதிய மென்பொருள் உருவாக்கப்படுகிறது; இந்த பணி முடிவடையும் தருவாயில் உள்ளது; டிசம்பர் முதல் மாநிலம் முழுதும் விரிவாக்கம் செய்யப்படும்' என்றார்.

